பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

குள் அடைபட்டு மிருகக் காட்சி சாலையில் இருப்போம். அல்லது, சர்க்கஸில் மனிதன் சொன்னபடி வித்தை செய்வோம்.

இதையெல்லாம் என் அம்மாவும் அப்பாவும் எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

இரண்டு வயதாகும் வரை நாங்கள் அவர்களுடன்தான் இருந்தோம். அப்புறம் நாங்கள் தனித் தனியாகப் பிரிந்து போய்விட்டோம். எத்தனே நாட்களுக்குத்தான் அப்பா, அம்மாவுக்குப் பாரமாக இருப்பது?

பிறகு, நான் ஒரு குகையைக் கண்டுபிடித்து அதிலே தனியாக வசிக்கத் தொடங்கினேன். பகல் கேரத்தில் குகையிலே அல்லது புதர் மறைவிலே படுத்து உறங்குவேன். இரவு நேரத்தில் வேட்டைக்குப் புறப்பட்டுவிடுவேன்.

சில சமயம் நான் ஆற்றில் குளிப்பதுண்டு. குளித்தவுடன் கரைக்கு வந்து, அங்கே படுத்துப் புரளுவேன். அதிலே எனக்கு ஒரு தனி ஆனந்தம். ஆற்றைக் கடந்து அக்கரை போகவும் எனக்குத் தெரியும். அடிக்கடி நான் அப்படிப் போவதுண்டு.

“எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாயே, உனக்கு மரம் ஏறத் தெரியுமா?” என்று கேட்கிறீர்களா? அதுவும் எனக்குத் தெரியும். ஆனால்,மிகவும் அவசியமான போதுதான் ஏறுவேன். இருந்தாலும் சிறுத்தைப் புலியைப் போல அவ்வளவு நன்றாக மரம் ஏறத் தெரியாது.

முன்பெல்லாம் மனிதர்களைப் பார்த்தால், நான் தானாக ஒதுங்கிப் போய்விடுவேன். ஆனால், இப்போது மனிதர்களைக் கண்டால் விடமாட்டேன். இதற்குக் காரணம் என்ன, தெரியுமா?