பக்கம்:எங்கே போகிறோம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124 எங்கே போகிறோம்?

இன்று நமது நாட்டுக் கூட்டுறவு நிர்வாகத்தில் அரசின் தலையீடுகள் அதிகம். கூட்டுறவு நிர்வாகத்தில் அரசின் தலையீடுகள் குறையவேண்டும். கூட்டுறவு நிறுவனங்களிலே கூட இரண்டு சாதி முறையிருக்கிறது. அரசின் அலுவலராகப் பணி செய்பவர்களுக்குக் கை நிறைய ஊதியம். கூட்டுறவு சங்கத்தின் சிப்பந்திகளுக்குச் சம்பள விகிதம் மிகவும் குறைவு.

மேலும் கூட்டுறவுத் துறையில் வேலை பார்க்கும் சில அரசு அலுவலர்களுக்குக் கூட அரசுத் துறையைப் போல ஊதியம் இல்லை என்பது ஒரு குறை. ஆதலால் இன்று நமது கூட்டுறவுத் துறை பலமாக இல்லை . கூட்டுறவுத் துறையைச் சீரமைக்க உடனடியாக மக்கள் முன்வர வேண்டும்.

மைய அரசு, கூட்டுறவுத் துறை குறித்து, கொண்டுவர இருக்கும் நாடு தழுவிய கூட்டுறவுச் சட்டம் விரைவில் வரும் என்று எதிர்பார்ப்போமாக! கூட்டுறவு அமைப்பில் இன்று சரியான அடித்தளம் இல்லை. ஆனால் மேல் மட்ட அமைப்பு பலமாக இருக்கிறது, இதைத் தவிர்த்து அடிமட்ட அமைப்புகள் பலமானவையாக அமையும்படி செய்யவேண்டும்.

நமது நாட்டுப்புற மக்களின் முன்னேற்றதிற்குக் கூட்டுறவுத் துறையைத் தவிர வேறு வழியில்லை என்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். சிறியவர்களையும், பலவீனமானவர்களையும் பாதுகாத்துப் பயன்படுத்துவதே குறிக்கோள். நமக்குக் கதி கூட்டுறவேயாம். வேறு வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

சமூகம் முழுவதும் - வளம்பெற்று வாழ்வதற்குரிய முயற்சிகளுக்குத் துணையாக அமையக் கூடியது கூட்டுறவுதான்! உலகத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்ற-