பக்கம்:எங்கே போகிறோம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மேம்பாட்டில் இலக்கியத்தின் பங்கு 147

நிலத்தையும் நீரையும் கூட்டிப் பயன் காண்பவர்கள் இவ்வுலகில் உடம்பையும் உயிரையும் ஒரு சேரப்படைத்தவராவர். ஒரு நாட்டில் நிலப்பரப்பளவு எவ்வளவு மிகுதியாய் இருப்பினும் நீர்வளம் இல்லையேல் அந்நிலம் பயன்படாது. ஆதலால், நிலம் பள்ளமாய் இருக்கும் இடத்தில் கரையைக்கட்டித் தண்ணிரைத் தேக்கு!” என்று அறிவுறுத்துகிறார்.

இங்ஙனம் நீரைத் தேக்குவதைத்தான் இன்று கசிவுநீர்க் குட்டை என்று கூறுகின்றோம். இங்ஙனம் தண்ணீரைத் தேக்கிப் பயன்கொள்பவர்கள் இந்த உலகத்தின் செல்வத்துடன் இணைக்கப் பெறுவர். தண்ணீருக்குக் கரைபோட்டுத் தளையமைக்காதார் இல்வுலகத்தில் வாழ்ந்தும் வாழாதாரே!

இனிய அன்புடையீர்! மழைவளம் வர, வரக் குறைந்து வருகிறது! மழை, தேவை! மழைவளம் சிறக்கக் காடுகளை வளர்க்கவும்; அடர்த்தியான காடுகளை வளர்க்கவும். அகன்ற இலைகளையுடைய மரங்கள் அதிகமான மழையை வரவழைக்கும். பெய்யும் மழைத்தண்ணிரை, சொட்டு நீர்கூடவீணாகாமல் தேக்கிவைத்து, குறைவான தண்ணீரை பயன்படுத்திப் பயிர்களை வளர்த்துப் பயன்பெற வேண்டும்.

தண்ணீரைப் பாதுகாத்தல் என்பது சமுதாய மேம்பாட்டில்-பொருளாதார மேம்பாட்டில் முக்கியமான பணி.

இந்தப் பணியை, கடமையை நம்மில் பலர் இன்று உணரவில்லை. பல கண்மாய்கள், வரத்துக் கால்கள் தூர்ந்து கிடக்கின்றன. தூர்ந்து கிடப்பதோடன்றி அவற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. கண்மாய்களை, ஏரிகளை ஏரிகளின் நீர்ப்பரப்புப், பகுதிகளை, தண்ணீர் வரத்துக் கால்களை ஆக்கிரமிப்பது குற்றம்; சமூகக்