பக்கம்:எங்கே போகிறோம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மேம்பாட்டில் ஆன்மிகத்தின் பங்கு 157

ஆன்மா உண்டென்பதும், அது நிலையானது என்பதும் பெறப்படும் உண்மைகள். கடவுள் ஆன்மாக்களைப் படைத்தான் என்ற கொள்கை ஏற்புடையதன்று. கடவுள் குறைவிலா நிறைவு. நிறைவிலிருந்து குறை தோன்ற முடியாது. ஆதலால், கடவுள் ஆன்மாக்களை, உயிர்களைப் படைத்திருக்க முடியாது. “எனது” என்றும், “நான்” என்றும் உரிமை கொண்டாடும் ஒன்று உளது. அதுவே ஆன்மா.

ஆன்மா என்பது சமஸ்கிருதச் சொல். உயிர் என்பது தமிழ்ச் சொல். உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய டார்வின் கொள்கையில் உடன்பாடு மிகுதியும் உடையது தமிழ் மரபு. உயிர்களின் பரிணாம வளர்ச்சியில், உயிர்கள் ஓரறிவுயிர் தொடங்கி, பரிபக்குவ நிலையினுக்கு ஏற்ப மாறி மாறிப் பிறந்து, கடைசியாக ஆறறிவு உடைய மனிதனாகப் பிறக்கிறது என்பது தமிழ்ச் சிந்தனை!

அறிவு சார்ந்த பரிணாம வளர்ச்சியில், பாம்பு. சட்டையை உரித்துப் போட்டுவிட்டுப் புதுச் சட்டையுடன் உலாவருதலைப் போல், உயிர் உடலை மாற்றிக் கொண்டே வந்து, மானுடப் பிறப்பை எய்தியது. அதனால்தான் சாதலையும், பிறத்தலையும், திருவள்ளுவர்

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”

என்றார்.

ஆன்மிகம் என்பது முற்றிலும் ஆன்மாவைச் சார்ந்தது. அதாவது, ஆன்மாவின் தரத்தை உயர்த்திக் கொள்ளும் வாழ்க்கை முறை. இந்த உடல், உடலின் பொறிகள் வழி குணங்கள் இல்லை. குணங்களும், திறன்களும், பண்புகளும், ஆன்மாவைச் சார்ந்தவையே என்பது வெளிப்படை.