பக்கம்:எங்கே போகிறோம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுதந்திர தின விழாச் சிந்தனைகள்15

ஆச்சாரியன் “இந்த மந்திரத்தை நீ மற்றவர்களுக்குச் சொன்னதால் நீ நரகத்திற்குப் போவாய்” என்று சொன்னார். “கோடானுகோடிப் பேர் வைகுந்தத்துக்குப் போகும்போது நான் நரகத்திற்குப் போனால் என்ன?” என்று இராமாநுசர் கேட்டார். அந்த இராமாநுசர் பிறந்த மண்ணில் இன்றைக்குச் சுயநலமே வளர்ந்து வருகிறது. பிறர் நலம் குறைந்து வருகிறது. நாட்டுக்கு உழைத்தல் தவம் என்று பாரதி சொன்னானே, அந்த தவம் மீண்டும் தோன்ற வேண்டும். அந்தத் தவத்தை வளர்க்க வேண்டும். அந்தப் பெருமக்கள் காலத்தை வென்றார்களா?

எத்தனை சிறந்த கவிஞர்கள், தத்துவ ஞானிகள், மேதைகள் இந்த நாட்டில் தோன்றினார்கள்? அவர்கள் காலம் கடந்து நம்மால் பாராட்டப்படுகிறார்கள். போற்றப்படுகிறார்கள். ஆனால் அவர்களை நாம் பின்பற்றுகிறோமா? அவர்களுடைய வழித் தடத்தில் நாம் நடக்கின்றோமா? அவர்களுடைய சிந்தனைகளுக்கு செயல்களுக்கு நாம் வெற்றி சேர்ப்பிக்கின்றோமா? என்றால் இல்லை.

இன்று நம்முடைய நாடு ஜனநாயக நாடு. மக்களாட்சி முறை நடைபெறுகின்ற நாடு. ஜனநாயகம் என்பது ஒரு அரசியல் கோட்பாடு மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. நண்பர்களுக்கிடையில், கணவன் மனைவிக்கிடையில், குடும்பச் சூழ்நிலையில், கடை வீதியில், ஊரில், நாட்டில், சட்டசபையில், பாராளுமன்றத்தில், எங்கும் ஜனநாயக மரபுகள் செழித்து வளரவேண்டும். சொல்லுவது சிலவாக இருக்கவேண்டும். பிறர் வாய் கேட்பது அதிகமாக இருக்கவேண்டும். ஜனநாயக வடிவம் போதாது. ஜனநாயக உணர்வு தேவை. ஜனநாயக வாழ்க்கையின் மரபில் அலட்சியம் கூடாது.