பக்கம்:எங்கே போகிறோம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178 எங்கே போகிறோம்?

வது கொசுவாக இருந்தாலும் பரவாயில்லை. குறிக்கோள். உயர்வாக அமைய வேண்டும்.

பல நூறு ஆண்டுகளாக நம்முடைய சமுதாயத்தை வருத்தி வரும் தீண்டாமை, சாதிப் பிரச்சனைகள், மதப் பிரிவினைகள், அறியாமை, வறுமை முதலியன, சுதந்திரம் வந்த பிறகும் அகன்றபாடில்லை. இந்தப் புன்மைகளை யெல்லாம் அகற்றி, ஒரு புதிய உலகத்தைப் படைப்பதை இலட்சியமாகக் கொள்வோம்!

புவியை நடத்துவோம்! பொதுவில் நடத்துவோம்! கூடி வாழ்தல் ஒரு பண்பு; நாகரீகம்; கூட்டுறவு உழைப்பை ஊக்குவிக்கும்; கோடி நன்மை தரும்; கூட்டுடமைச் சமுதாயமே எல்லோரும் எல்லாச் செல்வமும் பெற வழி செய்யும் வகை செய்யும்; கூட்டுடமைச் சமுதாயமே பொதுநலம் காண வழி!

காலம்-வாழுங் காலம் மிக மிகக் குறைவு. வாழ்க்கையின் தொடக்கத்தில் பல ஆண்டுகள் குழந்தைப் பருவத்தில் கழிந்து போகின்றன. வாழ்க்கையின் பிற்காலத்தில் பல ஆண்டுகள் ஓய்வில், முதுமையில், கழிந்து போகின்றன. இடையில் 40 ஆண்டுகள் தாம் வாழும் காலம். காலத்தை விலை மதிப்புள்ளதாக ஆக்கவேண்டும்.

இளமையில் படித்தது வாழ்க்கை முழுவதையும் நடத்தப் போதாது. நாள்தோறும் புத்தறிவு தேவை. நாள்தோறும் பழைய இலக்கியங்கவைப் படிக்கவேண்டும். நாள்தோறும் புதிய அறிவியல் நூல்களைத் தேர்வு செய்து படிக்கவேண்டும். கற்றல் ஒரு தொடர் பணி! நாம் தொடர்ந்து கற்றுக்கொண்டே போனால் நன்றாக வாழலாம். உடலுக்கு வலிவு; ஆன்மாவிற்கு கருத்து!

நல்ல நூல்களைக் கற்றல், சிந்தித்தல், தெளிதல், செயற்படுதல், ஆன்மிக வாழ்க்கைக்குத் துணை செய்யும்.