பக்கம்:எங்கே போகிறோம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்விச் சிந்தனைகள் O 27

இன்று அறிவியல் என்ற பெயரில் வரலாறு, இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகள் புறக்கணிக்கப்படுகின்றன. ஆதலால், இன்றைய மனிதன் நாகரீகத்தை இழந்து காவல் நிலையங்களின் வளர்ச்சிக்கும், சிறைக் கூடங்களை நிரப்பவுமே உரியவர்களாகி விட்டார்கள். கடந்த சில ஆண்டுகளில் காவல் நிலையங்களின் வளர்ச்சியே குற்றங்களின் வளர்ச்சிக்கு நிரூபணமாகிறது. ஆணும், பெண்ணும் இணைந்து வாழவேண்டியது சமூக அமைப்பு.

இச்சமூகத்தில் இன்று கல்வித் துறையிலிருந்து காவல் துறை வரையில் ஆண், பெண், பிரிக்கப்படுகின்றனர். ஏன் இந்த அவலம்? இந்த அவலத்தை முதலில் செய்தது ஆண் ஆதிக்கச் சமுதாய அமைப்பு. திருக்கோயிலில் அம்மை அப்பனாக இருந்து வழிபடும் பொருளை-அர்த்த நாரீசுவரனாக இருந்த பரம்பொருளை-இருவேறாகப் பிரித்துத் தனித் தனியாக்கினார்கள்.

அதற்குப் பிறகுதான் புராணங்களில்கூட ஆண் சாமிக்கும், பெண் சாமிக்கும் சண்டைகள் தொடங்கின. இன்னும் அதே திசையில்தான் போய்க்கொண்டிருக்கிறோம். ஆண், பெண் சமத்துவத்தைக் கல்வியில்கூடக் காண முடியவில்லை. ஏன்? பண்பாட்டு வளர்ச்சிக்குரிய கல்வியை வழங்காததுதான் காரணம். வளரும் வரலாற்றுக்குரிய உயிர்ப்புள்ள கல்வியை மனிதனுக்குத் தரவேண்டும்.

கல்வி, தெரியாததைத் தெரிந்து கொள்வதற்கு மட்டுமன்று. கல்வி, ஆன்மாவின் சக்தியைத் தூண்ட வேண்டும். நல்ல காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது! நல்ல காரியங்களைச் செய்யும் ஆர்வத்தைத் தரவேண்டும். ஒரு ஊர், ஒரு நாடு எப்படி இருக்கிறது என்பதை அளந்தறியப் பயன்படுவது கல்வியேயாம்.