பக்கம்:எங்கே போகிறோம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்விச் சிந்தனைகள் O 31

படைப்பாளிகளை உருவாக்கும் உலகை நோக்கிச் செல்லவேண்டும்.

கல்விக்கு இதயம் தேவை. சோவியத் கல்வியாளன் சுகோம்லின்ஸ்கி “குழந்தைகளுக்கு இதயத்தைக் கொடுங்கள்” என்று எழுதினான். கல்வி, மூளையோடு மட்டுமோ, கற்கும் நூல்களோடு மட்டுமோ சம்பந்தமுடையதன்று. இதயத்தோடும் சம்பந்தமுடையது. கல்வி கற்பிக்கவும், கல்வி கற்கவும், அதற்கென ஒரு சிறந்த பாங்கு தேவை.

கற்பிக்கும் ஆசிரியருக்குச் சிறந்த உணர்வு நிறைந்த இதயம் தேவை. கற்கும் மாணவருக்கும் ஆசிரியரைப் பூரணமாக ஆசிரியரின் மனத்தைக் கூடப்புரிந்துகொள்ளும் உள்ளம் வேண்டும். அப்போதுதான் கற்பிக்கும் பணியும், கற்கும் பணியும் அர்த்தமுள்ளது ஆகும்.

இத்தகு கல்விச் சூழலுக்கு உரியமொழி தாய்மொழியே என்ற கருத்திற்கு இரண்டாவது கருத்து இருக்கமுடியாது. இயற்கை வழங்கும் கொடைகளில் ஒன்று தாய்மொழி. தாய்மொழியே சிந்தனைமொழி; உணரும்மொழி. ஒரு நாட்டு மக்களை அடிமைப்படுத்த முதற்சாதனம் அந்த நாட்டு மக்களைத் தாய்மொழியில் கல்வி கற்க அனுமதிக்காது இருப்பதே.

இன்று நம்முடைய நாட்டில் தாய்மொழி வழிக் கல்வியியக்கம் வெற்றிபெறவில்லை. தேசீயமொழியைக் கற்றபாடில்லை. ஆங்கிலத்திலிருந்து தாய்மொழிக் கல்விக்கு மாற மறுப்பது பலவீனம். இந்ததிசையில் செல்வது விரும்பத்தக்கதல்ல-தாய்மொழிக் கல்வியும், தேசீய மொழியறிவும் நாம் பெற வேண்டியவை.