பக்கம்:எங்கே போகிறோம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உழைப்புச் சிந்தனைகள் O 39

உழைக்க வேண்டும். அப்படி ஒரு குறிக்கோளுடன் ஒரு துறையில் வாழ்நாள் முழுதும் உழைத்தால்தான் அந்தக் குறிக்கோள் கைகூடும். நமது வாழ்க்கையும் உன்னத நிலையை அடையும். இங்ஙனம், துறைதோறும் நின்று உழைப்பவர்கள் எண்ணிக்கைக் கூடினால் நாடு வளரும். உழைப்பவர் உலகம் எளிதில் வெற்றி பெறும்.

உழைத்து வாழ்வது என்ற வாழ்க்கையின் கோட்பாடு அனைவருக்கும் பொருந்தும். உழைப்பு என்பது அனைவருக்கும்-மனித குலம் முழுவதுக்கும் உரிய பொறுப்பு. மனித குலத்தில் யாராவது சிலர் உழைக்காமல் வாழ்ந்தால் அவர்களுடைய உழைப்பின் பங்கை மற்றவர்கள் சுமக்கவேண்டிய நிலை ஏற்படும்.

இன்று இந்தப் போக்கு அதிகமாக வளர்ந்து வருகிறது. உழைக்காதவர்களும் அல்லது அரைகுறையாக உழைப்பவர்களும் அல்லது உழைப்பது போலப் பாவனை செய்பவர்களும் இன்று சமுதாயத்தில் பல்கிப் பெருகி வருகின்றனர். இஃது ஒரு சாபக்கேடு.

இந்தத் தவறான நடைமுறை பெரும்பாலும் படித்தவர்களிடையிலும் அதிகார வர்க்கத்தினரிடையிலும் பரவி வருகிறது. நம்முடைய நாட்டில் உணவுப் பற்றாக் குறை இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குரிய கையிருப்பு இருக்கிறது என்று உணவு அமைச்சகம் கூறுகிறது.

ஆனால், பணப் பற்றாக்குறை இருக்கிறது. கடன் வாங்க வேண்டியிருக்கிறது. இது ஏன்? உழுவோர் உலகம் தமது உழைப்பை முறையாகச் செய்து நாட்டைப் பாதுகாத்து வருகிறது. மற்றத் துறைகளில் போதிய உழைப்புக் கிடைக்கவில்லை என்பது, தானே உய்த்துணரக்கூடிய கருத்து.