பக்கம்:எங்கே போகிறோம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உழைப்புச்சிந்தனைகள் 43

செலவழிக்கப் பெறுகிறது. ஒரு கடமையைச் செய்து முடிக்கும்வரை இளைப்பாறுதல் என்ன வேண்டியிருக்கிறது?

இன்று அலுவலக இடைநேரம், விடுப்பு தாராளமாக்கப்பட்டிருக்கும் நிலை, -இவ்வளவும் உழைப்புக்குப் பகை. பணிகளுக்கிடையில் இளைப்பாறுவது மிகவும் தவறு.

உழைப்பு, உடம்பை வலிமையுடையதாக்கும். உழைக்கும்போது வரும் இடையூறுகள் மனத்துக்கு வலிமை சேர்க்கும். அதனால் இடறினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உழைப்பினைத் தொடர்ந்து செய்தலுக்குரிய உறுதி தோன்றும்.

உழைப்பாளிகள் இழப்புக்கள், துன்பங்கள் இவைகளைப்பற்றிக் கூடக் கலங்க மாட்டார்கள். “வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்?” என்பது அவர்களுடைய நெஞ்சுறுதியுடன் கூடிய பாங்கு. இத்தகு மனப்பாங்கினைப் பெற்றவர்களே உலகில் மகத்தான் காரியங்களைச் செய்திருக்கிறார்கள்.

சாதனை செய்தவர்களின் வரலாறுகள் உழைப்பின் அருமையை உணர்த்துகின்றன. “பெரிய மனிதர்கள் உச்ச நிலையை அடைந்தார்கள் என்றால், அவர்கள் திடீர் என்று தாவிக் குதிக்கவில்லை. மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் உழைத்து முன்னேறினார்கள்” என்று லாங்பெலோ கூறினார். நமது ஒளவையாரும்,

“மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்-செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்”