பக்கம்:எங்கே போகிறோம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உழைப்புச் சிந்தனைகள் 47

முயற்சிக்கும் உழைப்புக்கும் சில தடைகள் வருவதும் உண்டு. முதலில் நிற்கும் பெரியதடை ஊழ். ஊழ்-விதி -வினை-தெய்வம் என்பன ஒரு பொருள் சொற்கள். நமது மக்களில் பலர் ஊழின் மீது அளவற்ற நம்பிக்கை வைத்து உழைக்காமலே வாழ்கின்றனர்.

உழைத்தாலும் ஊழின் துணை இல்லாது போனால் காரியம் கை கூடாது என்ற கருத்து நமக்கு இருக்கும்வரை ஊழை வெற்றி பெற இயலாது. “அடுத்து முயன்றாலும் ஆகும் நாளிலேயே ஆகும்” என்பது அவர்கள் கூறும் பழமொழி. ஆனால் இது உண்மையன்று.

ஒரு காரியம் நிறைவேற எவ்வளவு உழைப்புத் தேவைப்படும் என்று ஓர் அளவிருக்கும். அதையும் சூழ் நிலையையும் ஆராய்ந்தறிந்து கணக்கிட்டுக்கொண்டு முறையாக அறிவார்ந்த உழைப்பு செய்யப் பெறின், வெற்றிகிடைக்கும். ஊழ், தடையாக இருக்காது. ஊழினை மாற்றுவதற்கே பிறப்பு. ஊழினை வெற்றிபெறப் பழக்கங்களை, வழக்கங்களை, வெற்றிபெற வேண்டும். நாள் தோறும் புத்துயிர்ப்பு பெறவேண்டும்.

அடுத்து உழைப்புக்கு ஒரு பெரிய தடை கடவுள் நம்பிக்கை-கடவுள் வழிபாட்டின் அடிப்படையில் தோன்றிய தவறான நம்பிக்கை. கடவுள் நம்பிக்கை தேவை கடவுள் வழிபாடும் தேவை. ஆயினும் கடவுளே எல்லாவற்றையும் தருவான் என்று விண்ணப்பித்தலில் என்ன பயன்?

கடவுள் பருப்பொருள் எதையும் தரமாட்டான். தன் நம்பிக்கை, சோர்விலா மனம், உழைப்புக்குரிய ஆற்றல், இவையே கடவுளால் ஆன்மாக்களுக்கு வழங்கப் பெறுபவை. ஆதலால், கடவுள் நம்பிக்கையோ, வழிபாடோ மட்டும் வெற்றியைத் தந்துவிடும் என்று வாளா இருத்தல்