பக்கம்:எங்கே போகிறோம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52 எங்கே போகிறோம்?

நாள்தோறும் அறிவை வளர்த்துக்கொள்ளும் சமுதாயத்தில்தான் வளர்ச்சிக்கு வழி உண்டு; வாயில்கள் உண்டு. மாற்றங்களும் ஏற்படும்.

வளரும் சமுதாயத்தில் பரிணாம வளர்ச்சியில் தோன்றுவதே புதுமை. புதுமை செயற்கையன்று. இயல்பாக வாழ்க்கைப் போக்கில்-பரிணாம வளர்ச்சியில் தோன்றும் புதுமைகள். விவாதங்களைக் கடந்தவை. “முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியதாய்” என்றார் மாணிக்கவாசகர்.

பின்னைப் புதுமை, இனி எதிர்வரும் புதுமை. நம்முடைய சமுதாயத்தில் புதுமையை வரவேற்கும் இயல்பில்லாதவர்கள் பல ஆயிரம் பேர்கள் உண்டு. அவர்களையும் கடந்துதான் புதுமை வளர்ந்து வருகிறது; இனியும் வளரும். ஆனாலும் நாட்டில் வளர்ச்சியும் மாற்றங்களும் குறைவு.

நாம் நாளை வாழ்வோம் என்ற நம்பிக்கைகூடப் பெறாதவர்களால் நிலையாமைத் தத்துவம் பிழைபட உணர்த்தப்பட்டுள்ளது. உலகத்துக்கும் உனக்கும் உள்ள உறவு நிலையில்லாதது. ஆயினும், உலகமும் உன்னுடைய வழி வழி தலைமுறைகளும் வாழப்போவது உறுதி.

ஆதலால், நமக்கும் சரி, அடுத்த தலைமுறையினருக்கும் சரி, எதிர்கால நம்பிக்கை வேண்டும். வளர்ச்சியுடன் கூடியமாறுதல் தேவை. சென்ற காலத்தைவிட எதிர்காலம் விழுமிய சிறப்புடையதாக இருக்கவேண்டும் என்பது சேக்கிழார் திருவுள்ளம். “இனி எதிர்காலத்தின் சிறப்பும்” என்பார் சேக்கிழார். பாவேந்தன் பாரதிதாசனும், “புதியதோர் உலகம் செய்வோம்” என்றான்.