பக்கம்:எங்கே போகிறோம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொருளாதாரச் சிந்தனைகள் O 71

செய்பவன் நியாய விலைக் கடைகள் முன், நீண்ட நெடிய வரிசையில் நிற்கிறான் அரிசி வாங்க!

ஆம்! நமது நாட்டில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், விவசாயம் செய்யப் பெறாமல் தரிசாகக் கிடக்கிறது. தேசத்தின் செல்வ வளர்ச்சிக்குரிய ஆதாரங்களை, உற்பத்திச் சாதனங்களை, முறையாகப் பயன்படுத்தி உற்பத்தியைச் செய்து, தேசத்தின் செல்வத்தைப் பெருக்க வேண்டும்.

இன்று சில கடுமையான முயற்சிகளை, வழிமுறைகளை, மேற்கொள்ளாவிட்டால் 2001-லும் நமது நிலை இப்படியேதான் இருக்கும். நமது அடுத்த தலை முறைக்கும், நஞ்சினும் கொடிய வறுமையை, ஏழ்மையை வழி வழியாக விட்டுச் செல்லும் பாவத்தைச் செய்தவர்களாவோம்.

இன்னும் நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும், சரி, சமூக வாழ்க்கையிலும் சரி, அரசும் சரி, “ஏழ்மை பிரதேசமே இல்லை” என்று அறிவிக்கக்கூடிய அளவுக்கு, எல்லாப் பணிகளையும்விட வறுமை ஒழிப்புப் பணியை ‘இதுவே முதற்பணி’ என்று கருதிச் செயல்பட வேண்டும்.

பொருளாதாரத்திற்குப் பல தடைகள் உண்டு. அவற்றில் தலையாயது பழைய நம்பிக்கைகள்-அதாவது ஊழ், விதி முதலியவற்றை நம்பி, பொருளாதார முயற்சிகளைக் கைவிடுவது அல்லது சோர்ந்து போதல். மேலும் கடவுள், ஊழ் என்று வாளா இருப்பது.

கடவுள் உயர் ஆற்றல், உயர் பண்பே தவிர, கடவுள் பணம், செல்வம், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும். லேவாதேவிக்காரரும் அல்ல-இரவலர்களை ஊக்குவிக்கும் வள்ளலும் அல்ல. போதிய முதலீடு வேண்டும்.