பக்கம்:எங்கே போகிறோம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொருளாதாரச் சிந்தனைகள் O 73

ஒருவகைப் பொருள் முயற்சி வெற்றி பெற்றது. நிரூபிக்கப்பட்டு விட்டால், அந்தத் தடத்திலேயே மக்கள் செல்ல விரும்புவர். இது நமது மரபு. எல்லாவற்றுக்கும் மேலாக உற்பத்தித் தொடர்பில்லாத வழிகளிலேயே, வட்டிக்கடை நடத்துதல், வியாபாரம் செய்தல், எவரிடமாவது எடுபிடி வேலைக்கு அமர்தல் போன்றவற்றிலேயே மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது.

ஆர்வமும், முயற்சியும் உடையோருக்கும் பொருளாதார முயற்சிகள் எளிதில் கைகூடும். இந்த வழியில் அல்லாது, பொதுத் தொழில்களில் சுரண்டல் முறை நிலவுமானால் அது கொள்ளை நோயைவிடக் கொடியது. இந்தப் போக்கு, காரணமின்றியே வறுமையை உருவாக்கும்; இத்தகைய வறுமையை எதிர்க்கவேண்டும்.

பணவயமான சமூகம் கெட்ட பழக்கங்களில் ஈடுபடும். அதனால் வறுமை உற்பத்தியாகும். இந்த வறுமையை எதிர்த்துப் போராட வேண்டும். எல்லோரும் ஓயாமல். போராட வேண்டும்.

இந்தப் போரினைச் சுயநலக்காரர்கள், தவறான-முறையற்ற நிலையில் ஒரு அந்தஸ்தைப் பெற்றிருப்பவர்களே எதிர்ப்பார்கள். இவர்களது எதிர்ப்புகளை அஞ்சாது எதிர்த்து வெற்றி கண்டால்தான் சீரான பொருளாதாரம் வளரும்; நிலை நிற்கும்.

நமது நாட்டின் வறுமை வினோதமானது. நாட்டின் தேசீய வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால் அந்த அளவுக்குத் தனி நபர் வருவாய் உயரவில்லை. ஏன்? இதுதான் இன்றுள்ள புரியாத புதிர். நாட்டின் வருவாய் வளர்ந்திருந்தாலும், நாட்டின் மைய அரசும் சரி—மாநில அரசும் சரி-நிதிப் பற்றாக்குறையுடைய நிதி நிலைத்

எ–5