பக்கம்:எச்சில் இரவு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5


"ஏன்?” என்று கேட்டாள் அந்த ஏந்திழையாள்.

"மலர் நிறைந்த மரங்களும், மரங்கள் செறிந்த சோலைகளும், சோலைகள் நிறைந்த இடங்களும், உள்ளத்தில் சிற்றின்ப உணர்ச்சியைத் துாண்டிவிடும் என்பதால், அவற்றை அவர் விரும்பவில்லையாம்” என்றான் அவன்.

"அப்படி என்றால், கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே! தருநிழலே!” என்று, ஏன் அவர் சோலையின் சிறப்பை இவ்வாறு பாராட்டிப்பாட வேண்டும்” என்று கேட்டாள்.

அதற்கவன், "தான் விரும்பாத ஒன்றைப் பிறர் விரும்பலாம், பிறர் விரும்புவதால், அதைப் பற்றிப் பாடலாம்! இதில் தவறில்லை! பாரசீகத்துப் பெருங்கவிஞன் உமர்கையாம் என்பவர் மது அருந்தியதே இல்லையாம்! அப்படி இருந்தும் அவர் மதுவைப் பற்றிப் பாடவில்லையா?” என்றான் அவன்.

அந்தக் கொடியிடையாள், ஆங்கோர் கொடியில் பெரிய காய்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு ——மனிதன் மட்டும்தான் தினையளவுத் துன்பத்தையும் பனையளவுத் துன்பமாகக் கருதுகின்றான். ஆனால், எந்தக் கொடியும், தன் காய்களின் சுமையைப் பெருஞ் சுமையாகக் கருதுவதில்லை” என்று கூறிக்கொண்டே, அக்கொடியின் மடியிலிருந்த ஓர் அரும்பைப் பறித்து அதனை அவனிடம் காட்டி, அத்தான் இதன் பெயரென்ன? என்று கேட்டாள்.

“உன் பெயர்தான் இதன் பெயர்” என்றான்.

"அப்படி என்றால், இந்தப் பேரரும்பின் பெயரென்ன பிச்சியா?" என்று கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/15&oldid=1244855" இலிருந்து மீள்விக்கப்பட்டது