பக்கம்:எச்சில் இரவு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18


வெளிச்சத்தைக் கடன்வாங்கும் அந்த வெள்ளி நிலா, அப்போது அவளுக்குப் பனியையும் தந்தது. உள்ளத்தில் பிணியையும் தந்தது.

ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையே, அவள் தன் பெற்றோரை உற்று நோக்கினாள். அந்நள்ளிரவில் அவர்கள் இருவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர்.

நல்ல சமயம், இதனை நழுவ விடக் கூடாது என எண்ணிக் கொண்டு, தன் காற் சிலம்புகளைக் கழற்றி ஓரிடத்தில் வைத்துவிட்டு, வெளியே புறப்பட்டாள்.

வழியில், நாயொன்று அவளைக் கண்டுகுலைத்தது. அந்த நாயை விரட்டுவதற்காகத் தரையில் கிடந்த கல்லொன்றை எடுத்தாள். அது, தரையில் நன்றாகப் பதிந்திருந்ததால், அவள் எவ்வளவோ முயன்றும் அக்கல்லை எடுப்பதற்கு முடியவில்லை. இவ்வூரிலுள்ளவர்கள், மகா மடையர்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால், இந்தக் கல்லைக் கட்டிப் போட்டு விட்டு நாயை அவிழ்த்து விடுவார்களா? என்று எண்ணிக் கொண்டே, அவள் விரைவாக நடந்தாள்.

மாவீரன் அலெக்சாண்டர் கி.மு.326-ல் சிந்துநதியைக் கடந்து, தட்சசீலத்திற்கு வந்து சேர்ந்தானே அதுபோல, அவளுடைய அன்புக்காதலன் அந்த நள்ளிரவில், ஒர் ஆற்றைக் கடந்து, அடுத்துள்ள சிற்றுார் வழியாக ஒர் இலுப்பைத் தோப்புக்கு வந்து சேர்ந்தான். சிறிது நேரத்தில் அவளும் அங்கு வந்து சேர்ந்தாள்.

நெஞ்சிலே நின்றவன், அவள் நேரிலே நின்றான்.

நிலவிலே வெந்தவள், அவன் நிழலிலே நின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/28&oldid=1245108" இலிருந்து மீள்விக்கப்பட்டது