பக்கம்:எண்ணக்குவியல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



16

எண்ணக் குவியல்


கையாண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. இத்தகைய கடுஞ்சொல்லைச் சுடுசொல்லாற் சொல்லாமல் நடு சொல்லாற் சொல்லியது நயமுடையதாய்க் காணப்படுகிறது.

கொல்லாமைக்கு எதிர்மறையாகக் 'கொல்லுவோர்’ என்று கூட அவர் கூற விரும்பாமல் "மற்றல்லாதார்" எனக் கூறிய நயமும் எண்ணி எண்ணி வியத்தற்குரியதாகும்

இச்சொல்லே "வெல்லும் சொல்” ஆம்! ஏனெனில், இதைவிட வெல்லுஞ்சொல் வேறு இல்லை, ஆதலின்.

திருவள்ளுவர் வாக்குக்கு- கட்டளைக்கு- தாயுமானவர் செய்த இலக்கியத்தில் உள்ள இச்சொல் இலக்கணமாய் அமைந்திருக்கிறது. இது நமது உள்ளத்தையெல்லாம் மகிழ்விக்கிறது.

தம்பி! நீ பேசு உன்னால் பேச இயலும். உணர்ச்சி ஒன்றுதான் பேச்சுக்குத் தேவை. உண்மையும் இருந்தால் வேறு துணை வேண்டா. பிறகு பேச்சு ஊற்றுப் பெருக்காய் உலகு ஊட்டும். ஆனால், ஒன்றை மறவாதே; உன் சொற்கள் அனைத்தும் வெல்லும் சொல்லாக இருக்கட்டும். தீயன எண்ணாதே! தீயன சொல்லாதே! ஏனெனில், இவை இரண்டும் தீயன செய்யத் தூண்டும் நச்சுக் கருவிகள்.

எவரையும் வையாதே. வைவது தமிழ் நூல்களில் விலக்கப்பெற்றிருக்கிறது. நல்ல சொற்கள் இருக்கத் தீய சொற்களைக் கையாள்வது பழங்களிருக்கக் காயைக் கடிப்பது போன்றதாகும். முடிவாகக் கூறுமிடத்து வைவது தமிழனின் பண்பே அன்று என்றுதான் கூற வேண்டும். வைதிடுவோரையும் வாழ்த்தப் பழகு! வாழ்த்தக் கேட்கின் தாழ்த்திக் கொள்ளு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/17&oldid=1252986" இலிருந்து மீள்விக்கப்பட்டது