பக்கம்:எண்ணக்குவியல்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலும் குறளும்

37

யாகஅவர்கள் தேடிக் கண்டுபிடித்த பொருள் எது? மயில் இறகுதான்! அதைச் சுட்டுக் கருக்கித் தேனில் குழைத்துக் கொடுப்பதன்மூலம் உடனே வாந்தியைத் தடைப் படுத்த முடிகிறது.

எழுத்து : எழுத்தாணியைக் கொண்டு ஏட்டில் எழுதி வந்த மக்கள், அதைக் கைவிட்டுத் தாளில் எழுதத் தொடங்கிய பொழுது, முதன் முதலாக மக்களுக்கு எழுது கருவியாய்ப் பயன்பட்டது எது தெரியுமா? மயில் இறகு தான்.

இதுகாறும் கூறியவற்றால், மயிலும் அதன் தோகையும் ஏற்றுமதி செய்வதற்கும், அரண்மனைக்கும், சோலைக்கும். உவமைக்கும், வணக்கத்திற்கும், கூந்தலுக்கும், காவலுக்கும், கண்களுக்கும், நடைக்கும், நடனத்திற்கும், வண்ணத் திற்கும், அழகுக்கும், ஆராய்ச்சிக்கும், எழுத்திற்கும். விருந்திற்கும், மருந்திற்குங்கூடப் பயன்பட்டு வந்ததை நன்கறியலாம். இனி அது வள்ளுவர்க்கு எவ்வாறு பயன்பட்டது என்பதை அறிவதுதான் வியப்பிற்குரிய ஒன்று.

திருவள்ளுவர் ஒரு நாள் சாலை வழியே நடந்து கொண்டிருந்தார். வண்டிக்காரன் ஒருவன் மயில் தோகைகளைச் சுமை சுமையாய்க் கட்டி வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தான். வள்ளுவர் கண்களை மயில் தோகையின் கண்கள் கவர்ந்தன. அவர் அருகில் சென்று அவற்றைத் தொட்டுப் பார்வையிட்டார். அது பட்டினும் பளபளப்பாய், பஞ்சினும் மென்மையதாய், எடையிலும் மிக எளியதாய்த் தோன்றியது. என்றாலும், அதைக் கொண்டு இரும்புத் தூணையும் முரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார். நீங்கள் அந்த முடிவுக்கு வர இயலுமா? எண்ணிப் பாருங்கள்!