பக்கம்:எண்ணக்குவியல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

எண்ணக் குவியல்

அல்லர் அவர்; எவ்வளவு கத்திப் பேசினாலும், இந்துவும் சுதேசமித்திரனும் ஏழு எட்டு வரிகூட எழுதாத காலம் அது. அப்படிப்பட்ட காலத்திலேதான், இப்படிப்பட்ட பிள்ளை அவர்கள், தேசத்தொண்டும் செய்து வந்தார்கள், அவரது அருஞ்செயலையும், பெருங்குணத்தையும், உள்ளத் தூய்மையையும் உழைப்பின் சிறப்பையும் விளக்க இதைவிட வேறெதுவும் கூறவேண்டுவதில்லை.

உயர்ந்த அறிஞர்கள் உயிரோடிருக்கும் பொழுது அவர்களைச் சிறிதும் மதியாமல், அவர்கள் அறிவைப் போற்றாமல், செயலை வாழ்த்தாமல், நடத்தையைப் பின்பற்றாமல், அவர்கள் வருந்தும்போது ஒரு வேளை உணவுக்கும் வழிசெய்யாமல், மாண்டபிறகு மணிமண்டபம் கட்டுவதும், காலடிபட்ட மண்ணை எடுத்துக் கண்களில் ஒற்றுவதும், 'மாண்டாயோ மன்னவனே' என மாரடித்து அழுவதும், படம் திறப்பதும். பாக்கள் பாடுவதும் பூமாலை சுற்றிப் போற்றிப் புகழ்வதும் ஆகிய பழக்கத்தைக் கொண்ட இப்பாழாய்ப்போன தமிழ்நாட்டிலேதான் திரு. பிள்ளை அவர்களும் பிறந்தார்கள். அதனாலேயே அவர்களும் இக்கொடுமைக்கு இலக்கானார்கள்.

இன்னும் ஒரு படி தாண்டி, வாழ்ந்தபோது வைது கொண்டிருந்தவர்கள், மாண்டபிறகு மாறி, நாட்டிற்கு அவர் பெயரும், ஊருக்கு அவர் சிலையும் வேண்டுமென ஊருக்கு முன்னே ஓடோடி ஆலோசனை கூறும் மக்களுள்ள இத் தமிழ்நாட்டிலே திரு. பிள்ளை அவர்கள் பிறரால் வையப்படாமலும், வாழ்த்தப்படாமலும் வாழ்ந்துவந்தது ஒரு சிறப்பேயாகும்,

திரு. பிள்ளை அவர்களின் பேச்சு, நரம்புத் துடிப்புடன் எலும்புகளையும் துடிக்கச்செய்யும், உணர்ச்சி கலந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/47&oldid=1252942" இலிருந்து மீள்விக்கப்பட்டது