பக்கம்:எண்ணக்குவியல்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

எண்ணக் குவியல்

லிருந்து ஒழுங்கீனமான கோணல் வழியில் ஒருவன் நடந்தாலும், அவனால் அவனது வீடு அல்லது வீதி, நாடு அல்லது நகரம், கூட்டம் அல்லது இயக்கம் எதுவாய் இருப்பினும், அதுவும் சீரழிந்து, சிறப்பிழந்து காணப்படும்' தெரிகிறதா?”

“தாத்தா! உங்கள் உவமை மிகவும் நன்றாய் இருக்கிறது! என்றாலும், அது நல்லவர்களிள் கூட்டுறவிலிருந்து விலகித் தன் வழியே நடக்கும் தீயவன் ஒருவனுக்கு நன்கு பொருந்துகிறது. தீயவர்களின் கூட்டுறவிலிருந்து விலகித் தன் வழியே நடக்கும் நல்லவன் ஒருவனுக்கு அந்த உவமை பொருந்தவில்லையே தாத்தா!"

"ஆம், நீ புத்திசாலி! சரியான கேள்வி கேட்டாய். 'பிரிந்தவன் நல்லவனா, தீயவனா?' என்பதை அவனது செயல் காட்டிவிடும் அல்லவா?”

"ஆம்! நன்கு காட்டிவிடும். அப்படி என்ன இந்த முடத்தெங்கு தீச்செயலை செய்கிறது?”

"அதுவா? அப்படிக் கேள். ஒருவன் தன் பிள்ளையைப் போலத் தென்னம்பிள்ளையை எண்ணி, வைத்து வளர்த்து நீர் ஊற்றிக் காப்பாற்றி மரமாக்கிவிட்ட பிறகு, பலன் கொடுக்கும் சமயத்தில், வரம்பு கடந்து. வேலிக்கு வெளியே தலையை நீட்டி வருவார்க்கும் போவார்க்கும் மட்டையையும், பாளையையும், தேங்காயையும், பிறவற்றையும், கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறதே! அது ஒன்று போதாதா, அதன் நன்றிகெட்ட தீச் செயலுக்கு?”

"ஆம், தாத்தா! அக் கொடுஞ்செயலைத் தினந்தோறும் காண்கின்ற தோப்புக்காரனுடைய மனம் என்ன பாடுபடும் என்பதை நினைக்கும்பொழுதே என் மனம் வேதனைப்படுகிறது. பாவம்! அவன் என்ன செய்வான்?