அங்கு நான் தங்கியிருந்த நாட்களில் அங்குள்ள ஒரு பெரிய சுருட்டுவியாபாரியைச் சந்தித்து, என்னை அறிமகம் செய்து கொண்டேன். அவரிடமிருந்த புகையிலைகள் மூன்றாம் தரத்திற்குரிய சரக்காக இருந்தன. அதை அவரிடம் சுட்டிக்காட்டி “உங்களுக்கு உயர்ந்த சரக்குத் தேவையானால் எனக்கு ஆர்டர் கொடுங்கள். ஆனால், விலை இதைவிட ரூ. 100க்கு 20. கூடுதலாகும். இரண்டு மூட்டைக்கு ஆர்டர் கொடுங்கள் உடன் அனுப்பி வைக்கிறேன். உங்களுக்குப் பிடித்தமானால் தொடர்ந்து என்னிடம் சரக்கு வாங்கலாம்” என்று கூறினேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்து வியப்படைந்து, என்னை உட்காரச் சொல்லி, தன்னைவிட மேலதிகாரியிடம் என்னை அறிமுகப்படுத்தி, என்னுடைய வேண்டுகோளையும் எடுத்துக் கூறினார். அதற்கு அவர், மனமகிழ்ச்சியோடு “இப்படிப்பட்ட வியாபாரியைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். உயர்ந்த சரககை அதிக விலைக்கு விற்பது ஒரு நல்ல வியாபாரம். உங்களுடைய பேச்சும் தோற்றமும் உங்கள் மேல் எங்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கிவிட்டது. இரண்டு முட்டை என்ன? நீங்கள் இந்தியா சென்றதும் இதே கப்பலுக்கு 4. மூட்டைப் புகையிலை அனுப்புங்கள்” என்று கூறினார்கள். எனக்கு உற்சாகம் பிறந்தது. மனமகிழ்ச்சியோடும், ஊக்கத்தோடும் இந்தியா திரும்பி வந்து தொழிலைத் தொடங்கினேன். உயர்ந்த சரக்கு! அதிக விலை!!! என்பதை உறுதியாகக் கடைப்பிடித்துத் தொழில் நடத்தத் தொடங்கினேன்.
இந்தச் சிங்கப்பூர் வணிகம் என் வாழ்நாளில் வியாபார வெற்றிக்கு முதற்படியாக அமைந்தது.