பக்கம்:எது வியாபாரம், எவர் வியாபாரி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

யிலை அதிக ஈரமாக இருக்கிறது. ஒரு வாரம் கழித்த பிறகு கட்டு கட்டலாம். ஒவ்வொரு கட்டும் 40 பதம் எடை உள்ளதாக கட்டி வையுங்கள். இன்றைய பதினைந்தாம் நாள் பணத்துடன் வந்து சரக்கை எடுத்துச் செல்வேன்” என்று கூறி எழுந்து வந்துவிட்டேன். பெரிய கோம்பை மணியக்காரர் ஆச்சரியப்பட்டு ஒன்றும் புரியாமல் என்னை ஏறஇறங்கப் பார்த்து ‘தம்பி இது என்ன புது வியாபார முறையாக இருக்கிறது?’ என்று கேட்டார். நான் உடனே கூறினேன்: “ஆம் உயர்ந்த சரக்கை அதிக விலைகொடுத்து வாங்கும் வியாபாரிதான் நான் என் வியாபாரமும் புது வியாபாரம் தான்” என்றுகூறி விடைபெற்றுக்கொண்டேன், சொன்னபடியே பதினைந்தாம் நாள் சென்று ஏழு நூறு கட்டு புகையிலையும் லாபக் கட்டு பதினான்கு கட்டுகளையும் வாங்கிக் கொண்டு 95 ரூபாய் வீதம் பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு வந்தேன். அதற்கு அவர் அப்பணத்தை வாங்காமல், ‘ என்ன இப்படி வியாபாரம் செய்கின்றாய்? நாற்பது பதம் எடை இருக்கிறதா? என்று ஒவ்வொரு கட்டையும் சரிபார்த்தாயா? நான் நேற்றைய இரவு நிறுத்துப் பார்த்தேன் 38½ பதம்தான் இருந்தது. ஆகவே நூறு கட்டுக்கு நான்கு கட்டு உள்ளீடு போடவேண்டும்’ என்று சொல்லி ஏழுநூறு கட்டுக்கு இருபத்து எட்டுக்கட்டு கணக்கை குறைத்துக் கொண்டு அதற்குரிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். அந்தப் பண்ணையார் மீது எனக்கு அதிக மதிப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்து பல ஆண்டுகள் அவர் புகையிலை விளைய வைப்பதும், என்னிடம் விலை சொல்லாமல் கொடுப்பதும், நான் அதற்குரிய விலையை நானே மதிப்பிட்டு கொடுப்பதும் வழக்கமாகப் போய்விட்டது. பத்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படிப்பட்ட புகையிலை விளைகிறது என்று கேள்வியுற்ற மற்றொரு வியாபாரி பண்ணையாரிடம் புகையிலை வாங்கப்போனார். அவர் புகையிலையையே காட்ட மறுத்துத் திருப்பி அனுப்பிவிட்ட செய்தி என் காதுக்கு வந்தது.