பக்கம்:எது வியாபாரம், எவர் வியாபாரி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

நீ அவனைக் கருமி என்று கருதியது உன் தவறு” என்று கூறினார்.

சிக்கனக் கொள்கைக்கு ஒரு இலக்கணமும்கூட உண்டு. அது தேவைக்கு மேல் செலவு செய்வது டம்பம். அது தேவையில்லாதது. தேவையின் அளவு செய்வதுதான் சிக்கனம். இது விரும்பத்தக்கது. தேவைக்கும் செலவு செய்யாதது கருமித்தனம். இது வெறுக்கத்தக்கது.

ஐந்து மைல் தூரம் செல்வதற்கு வாடகைக் காரை கூப்பிடக்கூடாது. முப்பது நாற்பது செலவாகும். அது டம்பம். அதிகச் செலவு, ரு. 1-25 செலவில் பேருந்தில் ஏறி இறங்கி வேலையை முடித்து வரலாம். 1¼ ரூபாய் தான் செலவாகும். இது சிக்கனம். இதைத்தான் கொடுப்பானேன் என்று அரையனாவிற்குப் பட்டாணிக் கடலை வாங்கிக் கொண்டு நடந்து செல்கிறானே! அதுதான் கருமித்தனம். இவ்வாறே வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் அளவுகோல் வைத்துச் சிக்கனக் கொள்கையைக் கையாள வேண்டும். இதை மற்றவர்கள் பின்பற்றா விட்டாலும் வியாபாரிகள் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும.

ஒரு வியாபாரி முன்னே இருக்கிற தொலைபேசி அவன் வருமானத்தைப் பாழாக்கும் கருவியாக இருக்கக்கூடாது. தேவையானபொழுதுமட்டும் அதைக் கையாண்டு தொலைபேசிச் செலவை குறைத்தாக வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கின்றோமோ அவ்வளவுக்கு நல்லது. நாளைக்குத் தொலைபேசியால் பேசுகிற செய்தியை இன்றைக்கே அஞ்சலில் தெரிவித்தால் ஒரு ரூபாய் செலவோடு போய்விடும். கடிதம் எழுத வேண்டிய காலத்தில் எழுதாமல் அதைக் கைவிட்டுவிட்டு, காலம் தவறித் தொலைபேசியில் பேசிப் பொருளை வீணாக்குவது நல்லதல்ல. அவசரமானதையும் அவசியமானதையும்தான் பேசவேண்டும்.