பக்கம்:எது வியாபாரம், எவர் வியாபாரி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சேமிப்பு

ஒருநாள் என் தந்தையார் தாய் மாமனிடம் சொன்ன கதை இது:

“எனக்குத் திருமணம் ஆனதும் மாமியார் வீட்டுக்கு மணப்பெண்ணையும் என்னையும் அழைத்துக் சென்றார்கள். அங்கு சாப்பாட்டில் மூன்று பணம் வெற்றிலை பாக்குடன் வைத்தார்கள். அதை எடுத்துச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு சாப்பிட்டுவிட்டு, தாய் வீட்டிற்கு (மறு வீடு) அழைத்து வந்தார்கள். என்னையும் பெண்ணையும் வாசலில் நிறுத்தி ஆரத்தி எடுத்த என் தாய், “மாமியார் வீட்டில் வைத்த பணம் எங்கே” எனக் கேட்டு, கையை நீட்டினார்கள். நான் சட்டைப் பையிலிருந்து அப்பணத்தை எடுத்துத் தாயாரிடம் கொடுத்தேன். அதில் கால் பணம் செலவு செய்து விட்டதால், மீதி இரண்டே முக்கால் பணம்தான் இருந்தது. அதை எண்ணிப் பார்த்து அத்தனைபேர் முன்னே, மாப்பிள்ளையாக இருந்த என் தலைமீது ஆரத்தி எடுத்த அந்தத் தாம்பாளத்தாலேயே அடித்தாள். எனக்கு வயது 15. என் தந்தையார் மற்றொருவரிடம் கீழ்க்கண்டவாறு கூறிக் கொண்டிருந்தார்;

“ஏண்டா கால் பணம் வெட்டிச் செலவு செய்தாய்” என்று அதட்டிவிட்டு, “இந்தக் காலத்துப் பிள்ளைகளெல்லாம் தாய் தகப்பனைக் கேளாமலேயே செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். யார் அவர்களைக் கேட்பது?” என மனம் வருந்திக் கூறி கொண்டுடிருந்தார்கள்.

என் தந்தையார் எனக்குக் கூறிய இந்தக் கதையை மற்றவர்கள் கருத்தில் கொண்டார்களோ என்னவோ, என் கருத்தில் இது ஆழமாகப் பதிந்துவிட்டது.