பக்கம்:எது வியாபாரம், எவர் வியாபாரி.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சாமி மகமை

வியாபாரிகள் சிக்கனமாக வாழ்க்கையை நடத்தி, சேமிப்பைப் பெருக்கி, அவற்றைப் பாதுகாப்பது மட்டும் போதாது. பாதுகாத்த செல்வத்தை அறச் செயல்களில் ஈடுபடுத்தியும் ஆகவேண்டும்.

“செல்வத்தின் பயனே ஈதல்” என்பது சான்றோர் மொழி. இன்பங்கள் எல்லாவற்றிலும் உயர்ந்த இன்பம் ஈத்து உவக்கும் இன்பம். அது தனக்கே உரிய செல்வத்தை இல்லாத ஏழை மக்களுக்கு வழங்கி, பெற்றுக் கொண்ட மக்களின் முகம் மலர்ச்சியடைவதைக் கண்டு மகிழ்ச்சியைடயும் இன்பம்.

இருப்புப் பெட்டியில் பணம் பல ஆயிரம் இருக்கலாம். அதிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டு வெளி வந்து அறச் செயலில் ஈடுபடும்போதுதான் அச்செல்வம் தகுதியும், உயர்வும், அழகும் பெறுகிறது. இவற்றைப் பெட்டியிலுள்ள மற்ற பணங்கள் பெற முடியாது.

“எது வாழ்வு?” என்ற கேள்விக்கு, ‘பிறரை வாழ வைத்து வாழ்வதுதான் வாழ்வு’ என்று வள்ளுவம் கூறுகின்றது. இஸ்லாம் சமயத்தில் “ஐம்பெரும் கடமைகள்” என்பதில் ‘ஜக்காத்து’ என்று ஒன்று உண்டு. அதைத் தர்மம் என்றோ, அறம் என்றோ மொழி பெயர்க்க முடியவில்லை, ஒரு பணக்காரன் தன்னுடைய சொத்தில் 40-இல் ஒரு பங்கை இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய கட்டாய வரி-என்றுதான் மொழி பெயர்க்க வேண்டியிருக்கும்.

இதிலிருந்து ஒவ்வொரு பணக்காரனுக்கும் தன் சொத்தில் 40இல் ஒரு பங்கு அவனுக்குச் சொந்தம் இல்லை