பக்கம்:எது வியாபாரம், எவர் வியாபாரி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iv


1922ஆம் ஆண்டில் அவர்கள் எழுதியுள்ள வணிகக் கடிதங்கள் இன்றைக்கும் வணிகவியல் மாணவர்களுக்கு அரும் பொக்கிஷங்களாகும். மீண்டும் மீண்டும் படிக்க ஆவலைத் தூண்டுகின்றன.

உயர்ந்த சரக்கு! அதிக விலை!! என்ற அவருடைய உறுதியான வணிகக் கொள்கையோடு அவருடைய சிங்கப்பூர் வணிகம், பினாங்கு வணிகருக்குச் சரக்கு அனுப்ப மறுத்தவணிகமுறை, அவருக்கு வியாபார வெற்றியை தேடித்தந்தது என்பதோடு இந்த நிகழ்ச்சிகளை வாசிப்போருக்கு மிகுந்த ஆர்வத்தை அளிக்கிறது.

“ஆம் உயர்ந்த சரக்கை அதிக விலை கொடுத்து வாங்கும் வியாபாரி தான் நான்; என் வியாபாரமும் புது வியாபாரம் தான்” என்று பெரிய கோம்பை பண்ணையாரிடம் கொள்முதல் நிகழ்ச்சி, பண்ணையாரிடம் அவர் கொண்ட மதிப்பு, பண்ணையாரின் மனைவி அடுத்த வியாபாரிக்குச் சரக்கைக் காட்ட மறுத்த நிகழ்ச்சி படிப்போரை புல்லரிக்கச் செய்து, முத்தமிழ்க் காவலரின் பெருமையை புரிய வைக்கிறது.

வணிகத்துறையிலே சிறந்த தனிப்பெருந் தலைவராக உயர்ந்து காட்டிய அய்யா அவர்கள், வணிக சங்க இயக்கத்துக்கும் தமிழகத்தில் முன்னோடியாக விளங்கினார்கள் என்பது பலருக்குத் தெரியாது. தமிழ்நாடு வர்த்தகக் கழகத் தலைவராக அவர் ஆற்றிய பணிதான், இன்று தமிழகமெங்கும் உள்ள வணிகர்கள் ஆங்காங்கே பல்வேறு வணிக சங்கங்களை துவக்கி, பயன்பெற வழி வகுத்தது என்றால் மிகையாகாது.