பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எனது கதைகளின் கதைகள்

107

ஒரு போலிஸ் படையின் கிராமப் பிரவேசம்

எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரான சிவநாடான் ஊரில் ஒரு சம்பவம் அப்போது நடைபெற்றது. போலீஸ்காரர்களில் ஒரு பகுதியினர், ஒரு வேனில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களிடம் மாமூலாகக் குடித்துவிட்டு, வழியில், வயலுக்குத் தண்ணி கொண்டு போன ஒரு இளைஞனை வேனில் தூக்கிப்போட்டுக் கொண்டு போயிருக்கிறார்கள்; அவனை எங்கெல்லாமோ நிறுத்திவிட்டு, அவன் முன்னாலேயே சாராயமும் குடித்திருக்கிறார்கள்; சட்டமும் பேசியிருக்கிறார்கள். அந்த இளைஞனின் தந்தை ஒரு ஆசிரியர். ‘ஜாக்டி’ அமைப்பாளர்; அந்த வேனை ஊர்க்காரர்கள் மறித்து, போலீஸ்காரர்களை பலவந்தமாக இறக்கி, காலில் கிடந்த பூட்ஸ்களை கையில் பிடிக்கச் செய்து, ஊர்வலமாக நடத்தி இருக்கிறார்கள். இதைப் பின்னணியாக வைத்து, “ஒரு போலீஸ் படையின் கிராமப்பிரவேசம்” என்ற சிறுகதையை ‘செம்மலரில்’ எழுதினேன். எனக்குப் பிடித்த கதை. நான் ஏதோ ஒரு அப்பட்டமான பிரசார நெடியை அலைமோத விட்டிருப்பதாகவும், ‘செம்மலர்’ என்பதால், கதையை முற்போக்காக முடித்திருக்கிறேன் என்றும், நமது ஞான பண்டிதர்கள் நினைக்கலாம். ஆனால் கதை முழுக்க முழுக்க நடந்த நிகழ்ச்சி.

சாமியாடிகள்

எங்கள் ஊரில் பல குடும்பங்கள். சுமார் 100 தலைக்கட்டுக்களைக் கொண்ட ஒவ்வொரு பங்காளிக் கூட்டமும், பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும்.