பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

129

ணமாகச் சொல்ல முடியும் என்ற தாக்கத்தை நோய்க் காலத்தில் நான் படித்த ஒரு நாவல் ஏற்படுத்தியது. ஞானபீடப் பரிசு பெற்றவரும், காங்கிரஸ், ஜனதா தள பெருந்தலைகள் மோதிய கர்நாடக மாநில தார்வார் தொகுதியில், எழுத்தாளர் என்ற ஒரே காரணத்திற்காக 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவரும், ஒரு தேவதாசியைத் துணிந்து மணந்தவருமான சிவராம் கரந்தின் “எல்லாம் அழிந்த பிறகு” என்ற கன்னட நாவலின் தமிழாக்கத்தைப் படித்தேன். பேராசிரியர் சித்தலிங்கய்யா, மொழி பெயர்ப்பு என்ற எண்ணம் ஏற்படாதவகையில் அதை அழகாக இயல்பாகச் செய்திருந்தார். சராசரிக்கு சற்றே மேற்பட்ட ஒருமனிதர், குடும்பத்தைத் துறந்து, தன்னந்தனியாக வாழ்ந்தாலும் எவ்வளவு மனிதாபிமானியாக இருந்தார் என்பதை சித்தரிக்கும் நாவல். அந்தப் பாத்திரத்தின் மனிதாபிமானம் நமக்கும் இருக்கும். வானத்தை வில்லாய் வளைக்கும் அளவிற்கான மனிதாபிமானமல்ல. நம்மைப் போன்ற நல்லவர்களின் மனிதாபிமானத்தைப் போன்றதுதான். அதாவது கதைக்குரிய “கிளைமாக்ஸ் மனிதாபிமானமல்ல” ஆனாலும் சிவராம் கரந்த், அதைச் சொன்ன விதம் இருக்கிறதே, அது ஒரு சராசரி மனிதனையும் தன் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர வைக்கக்கூடியது. இந்தத் தாக்கத்தில், எனது அனுபவத்தை மையமாக வைத்து நாவல் எழுதப்போகிறேன்.