பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

133

தேன். உடனே அவர், ஒரு சிறு துண்டுக் காகிதத்தைக் காட்டினார். அதில் என் கைப்பட எழுதிய கணக்கு விவரம் இருந்தது. மொத்தம் 300 ரூபாய் இருக்கும். இதை அந்தப் பெண்ணிடம் நீங்கள் கொடுத்தது உண்டா என்று கேட்டார். எழுத்து என் எழுத்து. ஆனால் எப்போது கொடுத்தேன் என்பது தெரிவில்லை. நான் குழம்பினேன். இதைத் திருட்டுத்தனமாகக் கருதிய அந்த அதிகாரி, இன்னின்ன தேதிகளில் இவ்வளவு இவ்வளவு பணத்தை அந்தப் பெண் உங்களுக்குக் கொடுத்ததாகவும், அது அலுவலகப் பணம் என்றும், ஆகையால் கையாடல் செய்ய வைத்தது நீங்கள்தான் என்று அவள் விளக்கம் அளித்திருக்கிறாள் என்றும் விளக்கினார். பிறகு இதற்கு பதில் சொல்லுங்கள் என்றார் கம்பீரமாக, நான் பதறியடித்து, அந்தக் காகிதத்தைப் பார்த்தேன். அதில் “தினமணிக்கதிர்”, “குங்குமம்” போன்ற வார்த்தைகள் இருந்தன. திடீரென்று எனக்கு நினைவுக்கு வந்தது. அந்தப் பெண் டைப் அடித்ததற்கு அதிகமாகப் பணம் வாங்கி இருப்பதாக என் மனைவி என்னிடம் சொன்னதை, நான் அந்தப் பெண்ணிடம் சொன்னேன். உடனே அவள் “இந்தந்தக் கதைகள் இந்தந்த பத்தரிகைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன, நீங்கள் இவ்வளவு பணம் தரவேண்டும். உங்களுக்கு ஞாபகமறதி அதிகம். ஆகையால் இதில் கையெழுத்துப் போடுங்கள்” என்று கேட்க, நானும் அப்பாவித்தனமாகப் போட்டுவிட்டேன். எனக்குப் பற்றி எரிந்தது. ஆனாலும் அந்த அதிகாரியிடம் “குமுதம்” “தினமணிக்கதிர்” என்ற வார்த்தைகள் வந்திருந்தால், அது என்னவாக இருக்கும் என்று திருப்பிக் கேட்டேன்.