பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

சு. சமுத்திரம்

பிறகு நிலைமையை விளக்கினேன். அந்த அதிகாரியும் புரிந்து கொண்டார். ஒருமணி நேரத்திற்குப் பிறகு, அந்தப் பெண்ணிடம் பேசியிருப்பார் போலிருக்கிறது. எனக்கு டெலிபோன் செய்தார். அந்த பெண் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, தயாராக இருப்பதாகவும், என்னால் காலை நீட்ட முடியுமா என்றும் கேட்டார். நான் அவள் முகத்திலேயே விழிக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டேன். அவள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் இந்த விவரங்களையெல்லாம் மேல் அதிகாரிகளுக்கு எழுதியும், அது கிணற்றுக்குள் விழுந்த கல்லாகியது. பிறகு விசாரித்துப் பார்த்ததில் அந்த சர்தார்ஜி அதிகாரி சென்னைக்கு மாற்றப்பட்டார் என்றும், பதவியில் சேருவதற்கு முன்பு, சென்னையில் வீடு பார்ப்பதற்காக வந்தார் என்றும், அதற்கு இந்த விசாரணையை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு சர்க்கார் செலவில் ஓடி வந்திருக்கிறார் என்பதும், தெரிய வந்தது. இப்படிப் பட்டவர்கள்தான் இந்த நாட்டிலே அதிகாரிகள். ஈரத்துணியைப் போட்டு கழுத்தறுப்பவர்கள்தான் அலுவலர்கள். இப்படிச் சொல்வதால், எல்லாரையும் இப்படி சொல்ல மாட்டேன். ஆனால் இந்த பரந்து விரிந்த பாரதப் பெருநாட்டில், ஒரு தாலுகாவில் ஒரு காவல் நிலையம், ஒரு இன்கம்டாக்ஸ் ஆபீஸ் முழுமையாக லஞ்சப்பிடிப்பிலிருந்து விலகியிருக்கிறது என்று நம்மால் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்ல முடியாத வரை இப்படி ஒட்டுமொத்தமாகச் சொல்வதிலும் தவறில்லை. எப்படியோ, இந்தப் பின்னணியை வைத்து ஒரு குறுநாவல் எழுதினேன். குங்குமத்தில் பிரசுரமாயிற்று.