பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

145

ஆனாலும் இவர்கள் அதை இனாமாகக் கருதிவிட்டார்கள். படமும் வெளியாகி, சென்னையில் சோவியத் தூதரகத்தில் இது காட்டப்பட்டது. படத்திற்கு பலரின் பாராட்டுகள் கிடைத்தாலும் அது என்னமோ டப்பாவை விட்டு நகரவில்லை. இதற்குப் பிறகு, இரண்டு நண்பர்களும், எனக்குத் தெரியாமல் செய்தி விளம்பரத்துறையில் இதை விற்பதற்கு ஏற்பாடு செய்வதாகக் கேள்விப்பட்டேன். உடனே அவர்களை டெலிபோனில் கூப்பிட்டு வரவழைத்தேன். என்னுடைய கணக்கை செட்டில் செய்யும் முன்னால் படப் பிரதிகளை வாங்கக்கூடாது என்று புதுதில்லியில் உள்ள செய்தி விளம்பரத்துறைக்கு எழுதப் போவதாக மிரட்டினேன். அப்படி நான் எழுதியிருந்தால் படப் பிரதிகள் விற்பனையாகாது என்பது அவர்களுக்கும் தெரியும். கையெடுத்துக் கும்பிட்டார்கள். செய்தி விளம்பரத் துறை படத்தை வாங்கிய உடன், எனக்கு பாக்கித் தொகையில் ஒரு பகுதியைக் கொடுப்பதாக எழுதிக் கொடுக்க முன்வந்தார்கள். ஏமாளியான நான் அவர்கள் விசுவாமானவர்கள் என்று கருதி “எழுத வேண்டியதில்லை உங்களை நம்புகிறேன் பிரதிகள் விற்றதும் சொன்னபடி பணத்தைக் கொடுங்கள்” என்று சொன்னேன். ஆனால் அந்தப் பேர்வழிகளோ எனக்குத் தெரியாமலே படத்தை விற்று பணத்தையும் வாங்கிக் கொண்டார்கள். நீண்ட நாளுக்குப் பிறகு இதைக் கேள்விப்பட்ட நான் மீண்டும் அவர்களுக்கு டெலிபோன் செய்தால், கோர்ட்டுக்குப் போ என்று சொல்லி விட்டார்கள். கோர்ட்டுக்கும் போயிருக்கிறோம்.