பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

சு. சமுத்திரம் ☐

ளாக்கி, முத்து முத்தான எழுத்துக்களில் நகல் எடுத்துக் கொடுத்தார். ஆனந்த விகடனுக்கு அப்போதைய காலகட்டத்தில் இது வித்தியாசமான கதை. பாலசுப்பிரமணியம் கத்தரித்து அனுப்பியதை, சுத்திகரித்து “அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா” என்ற பெயரில் பிரசுரித்தது. இதைப் படித்த டில்லித் தமிழர்கள் “சிரித்து சிரித்து வயிறு புண்ணாயிற்று. ஒரே தமாஷ்” என்று சொன்னபோது நான் நொந்து போனேன். தமிழன் பொது வாழ்க்கைக்காக, குடும்ப வாழ்க்கையை எப்படி சிதைக்கிறான் என்கிற ஆதங்கத்தைச் சரியாகப் புரிய வைக்கவில்லையோ என்று நான் நினைத்தபோது, புதுடில்லியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைமைச் செய்தியாளரும், தலைசிறந்த சிந்தனையாளருமான திரு. கே. சீனிவாசன், இந்தக் கதையில் உள்ள அரசியல் பொடி அபாரம் என்று சொல்லி என்னைப் பாராட்டினார். அதற்குப் பிறகுதான் எனக்கு தெம்பு வந்தது. மனிதர்களுக்காகக் கதையே தவிர, கதைக்காக மனிதர்கள் அல்ல என்ற இலக்கியக் கோட்பாடு வலுப்பெற்றது.

குறிப்பு: திரு. செல்வராஜ் சிறந்த எழுத்தாளர். தாமரையிலும், கணையாழியிலும் தரமான சிறுகதைகளை எழுதியவர். இப்போது, தொலைக்காட்சித் துறையில் இருந்து, “வாலண்டரி ரிடையர்மெண்ட்” எனப்படும் சுய ஓய்வில் விலகியவர். தனியார் தயாரிப்பு நிகழ்ச்சி அமைப்பு ஒன்றை நிறுவி, பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில், கொடிகட்டிப் பறக்கிறார். வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பவர்கள்தான் முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.