பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

சு. சமுத்திரம் ☐

யென்றால் வீட்டில் சுய மரியாதையை புதுப்பித்துக் கொள்ள முடியாது என்ற இக்கட்டான நிலைமை. நானே தன்னந்தனியாய் அவளைக் கண்டுபிடித்து போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று என்னுள் மறைந்திருந்த கிராமத்து மண் தூள்பரப்பியது. ஆனாலும் நகரத்தில் பழக்கப்பட்ட நான் ஒரு கையாளையும் கூட்டிக் கொண்டு அந்தப் பெண்கள் நடமாடும் பகுதிக்குப் போனேன். அவள் தனது வயதான உடம்பெல்லாம் ஆடிய தந்தைக்கு உணவூட்டுவதைப் பார்த்து மனம் நெகிழ்ந்தது. ஆனாலும் அதைக் கல்லாக்கிக் கொண்டு, அந்தப் பெண்ணை நானும் எனது கையாளும் சேர்ந்து பக்கத்திலிருந்த ஒரு போலீஸ்காரரிடம் ஒப்படைத்து, அவருடன் சென்று காவல் நிலையத்தில் அவளைப் பூட்டிவிட்டோம். எனது ஓரளவு பிரபலமான பேரையும், நான் இருக்கும் பதவியையும் கருத்தில் கொண்டோ என்னவோ, காவல் துறையினர் அவளிடம் கடுமையாக நடக்கத் தொடங்கினார்கள். அவளோ என்னைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். அடிக்க ஓங்கிய அவள் கைகள், அனாதரவாக அல்லாடின. எனக்கு சொல்ல முடியாத துயரம். அவள் கண்களில் பொங்கிய கண்ணீரும், கூப்பிய கைகளும் என்னை நானே ஒரு அரக்கனாகப் பாவித்து குற்ற உணர்வில் துடிக்க வைத்தன. ஒரு மணிநேரத்திற்குப் பிறகு, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என்னிடத்தில் வந்தார். அந்தப் பெண் சின்னச்சின்ன திருட்டுக்களை மட்டுமே செய்யக்கூடியவள் என்றும், ஒரு தள்ளாத தந்தையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் இருப்பவள் என்றும், அவ்வப்போது கள்ளச்சாராயம் விற்பவள் என்றும் சொல்லி விட்டு,