பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

சு. சமுத்திரம்

போது ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்தது. (அப்போ நானும் இலக்கியவாதிதானே!)

இந்தத் தொடர்கதையை மிகவும் எளிமைப்படுத்தி நான் எழுதிக் கொண்டிருந்தாலும் அதில் வரும் நிகழ்ச்சிகள் அன்னக்காவடி மக்களின் அன்றாட வாழ்வில் நடைபெறுபவை. ஆகையால் என் இலக்கிய “தரத்தையும்” மீறி அந்தக் கதை தினத்தந்தி வாசகர்களால் ஆர்வமாகப் படிக்கப்படுகிறது என்பதை அறிந்ததும் நான் தப்பித் தவறிக் கூட, “இலக்கியவாதியாக” இருக்கக்கூடாது என்று சபதம் மேற்கொண்டிருக்கிறேன். இது செக்ஸ்சோ அல்லது புனித காதலோ இல்லாமல், போலீஸ் கெடுபிடிகள், கள்ளச்சாராய காய்ச்சல்கள், பேட்டை ரவுடிகள், அலுவலக சித்திர குப்தர்கள் ஆகியவர்களைச் சித்தரிக்கும் இந்த நாவலை இருபது அத்தியாத்திற்குள் முடிக்க முடியாமல் முப்பதுக்கும் மேலே நகர்த்னேன். தினத்தந்தி வாசகர்களுக்கு புதியதான இந்த கதை பெரிதும் வரவேற்கப்பட்டதால் நான் எத்தனை அத்தியாயங்கள் வேண்டுமென்றாலும் எழுதலாம் என்று சொல்லிவிட்டார்கள். ஆனாலும், நான் பழம் இனிக்கிறது என்பதற்காக கொட்டையோடு சேர்த்து சாப்பிட விரும்பவில்லை.

கள்ளச்சாராயக் கலை

தாழம்பூவில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் ஒரு பிரதான அம்சம். எப்படி காய்ச்சுகிறார்கள் என்பதையும் அதன் பின்னணியையும் தெரிந்து கொள்ளக் காய்ச்சல் லோகத்திற்கு போவதாகத் திட்டமிட்டேன்.