பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

சு. சமுத்திரம் ☐

போன் சாவியை நான் கொடுக்காட்டி ஒங்க அப்பன் வீட்டு சொத்தாடா... கேஷுவல் பையா” திட்டுவாங்குவதாக அழுதான். ஆனால் நிசமான டெலிபோன் திருடர்களின் பெயரைக் கொடுக்காமல் “வாய் செத்த” அப்பாவிகளின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள்தான் தன்னை அப்படி மிரட்டுவதாகச் சொன்னான். எனக்கு அது பொய் என்று தெரியும். அதேசமயம் அவனுடைய நிலைமையும் புரிந்தது. அவன் ஏதோ உண்மையைச் சொல்வது போலவும், அதை நான் நம்புவது போலவும் ஒர பாவலா செய்து அவனை வேலையில் சேர்த்துக் கொண்டேன். கேஷுவல்கள் இந்தக் காலத்து தீண்டத்தகாதவர்களாய் எல்லா அலுவலகங்களிலும் நடத்தப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினையையும் தாழம்பூ எடுத்துச் சொல்கிறது.

பேட்டை ரெளடிகள்

எங்கள் அலுவலகத்தைச் சுற்றியுள்ள குப்பங்களில் பேட்டை ரவுடிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆறுகொலை செய்துவிட்டு, அண்மையில் சிறைச் சாலையிலிருந்து திரும்பிய ஒருவரின் அண்ணனுக்கு சிலை வைக்க முயற்சி நடைபெறுகிறது. இதற்கு ஒரு அமைச்சரே பொறுப்பேற்று இருப்பதாகக் கேள்வி. பொதுவாக அமைதியும் அப்பாவித்தனமும் கொண்ட குடிசை மக்களிடையே இத்தகைய கொடுங்கோல், அரசியல் பின்னணியுடன் ஆதிக்கம் செலுத்துவதை கண்கூடாகப் பார்க்கிறேன். ஆகையால் தாழம்பூவில் ஒரு ‘அண்ணாத்தே’ வருகிறார். அவர் பேட்டை ரவுடிகளின் ஒட்டு மொத்தமான உருவம்.