பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

சு. சமுத்திரம் ☐

லாதவங்க நாங்க” என்று அவள் சொன்னபோது, அத்தனை அலிகளும் கண் கலங்கினார்கள். பேசி முடித்த பிறகு, நான் ஐம்பது ரூபாய் நீட்டியபோது அதை வாங்க மறுத்தார்கள். மாறாக, எனக்கும் என் நண்பருக்கும் ‘கேம்பா கோலா’ வாங்கிக் கொடுத்தார்கள். அந்தக் குடிசைப் பகுதியை விட்டு வெளியே வருவது வரைக்கும் “சார், சார், போலீஸைப் பத்தி நாங்க சொன்னது வெளியில தெரியப்படாது சார் தெரிஞ்சா சாவடி கொடுப்பாங்க சார்” என்று அந்த அலிகள் மாறி மாறிச் சொன்னது இன்னும் என் மனதை நோக வைக்கிறது. இவர்களோடு அல்லாது, ‘சொந்தக்காரர்கள் வீட்டிலேயே இருந்து ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் அலிகளையும் சந்தித்தேன். பம்பாயிலிருந்தும், டில்லியிலிருந்தும் சென்னைக்கு அடிக்கடி வரும் குறிப்பிட்ட சில அலிகளையும் சந்தித்துப் பேசினேன். ஒவ்வொருவரிடமும் ஒரு சோகச்சுமை. கூட்டிலிருந்து சிறகு முளைக்கு முன்பே தரையில் தள்ளப்பட்ட குருவிக் குஞ்சைப் போன்ற பரிதாபம்.

இவர்களைச் சந்தித்த பிறகு, எனது உறவு டாக்டர்களான, ராஜ்குமார், கலைவாணன் ஆகியோரைச் சந்தித்து இந்த அலிகள் உடல் ரீதியில் எப்படி ஆகிறார்கள், என்று தகவல் சேகரித்தேன். சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் சுப்ரமணியத்திடமும் உடல்கூறு பற்றி விசாரித்தேன். ஆக மொத்தத்தில், அலிகள் ஆண் உடம்பில் சிறை பட்ட பெண்கள், அல்லது பெண் உடம்பில் சிறை பட்ட ஆண்கள். இவர்கள் ஆணிலிருந்து பெண்ணா