பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாஸ்திரி பவனில் இப்போதைய தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ராமகிருஷ்ணன், சரியாக 23 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தி வைத்தார். அதற்கு முன்பே என் குடும்ப நண்பரும், த.மு.எ.ச.வின் இப்போதைய தலைவருமான தோழர் செந்தில்நாதனின் ‘சிகரம்’ பத்திரிகையில் “சத்திய ஆவேசம்” என்ற தொடர்கதையை எழுதிக் கொண்டிருந்ததை கே.எம். நினைப்பூட்டினார். இதற்கு மேலும் ஒரு படி சென்று எனது நான்கைந்து படைப்புகளை செம்மலரில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த இருவரது நட்பும், ஒரு நிறுவன நட்பாகி, சிறந்த இடதுசாரி சிந்தனையாளர்களான த.மு.எ.ச. செயலாளர் கதிரேசன், பொருளாளர் வரதராஜன், இந்த இயக்கத்தோடு இரண்டறக் கலந்த எஸ்.ஏ. பெருமாள், நன்மாறன், அகத்தியலிங்கம், குமரேசன், பிரளயன், சி.ஏ. முத்து, உதயகுமார், கமலாலயன், சு. வெங்கடேஷ், இரா.தெ. முத்து, புலவர் கி.த. பச்சையப்பன், மகேந்திரன் ஆகியோரது நட்பை ஈட்ட வைத்த மார்க்சிய கட்சி தலைவர்களான, பெரியவர்கள் ஏ.நல்லசிவன், சங்கரைய்யா, லட்சுமணன், வரதராசன், மீனாட்சிசுந்தரம், ஜவகர் ஆகியோரின் கண்துஞ்சா சமூக நினைப்பு என்னை இன்னும் பிரமிக்க வைக்கிறது.

இலக்கிய மகாநதி...

பெரியவர் வல்லிக்கண்ணன் அவர்களின் நட்பு எனக்கு கிடைத்த மிகப் பெரிய பேறு. அந்த இலக்கிய மகாநதி இன்னும் என் இலக்கிய பாத்திகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. இவரை தி.க.சி. யோடு சந்திக்கும்போது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படும். இப்போது கூட எனது கதையின் கருவை, பெரியவர் வல்லிக்கண்ணன், தோழர்கள் செந்தில்நாதன், எஸ்.ஏ.பி., சென்னை வானொலி நிலைய இயக்குனரும், சிறந்த இலக்கியவாதியுமான திரு. விஜய திருவேங்கடம் ஆகியவர்களில் ஒருவரிடம், விவாதித்த பிறகே பேனாவை எடுப்பேன். இதேபோல் அகில இந்திய ஜனநாயக மாதர் மன்றத்தைச் சேர்ந்த சகோதரிகள், மைதிலி சிவராமனும், பாப்பா உமாநாத், உ. வாசுகி, பாலபாரதி ஆகியோர் என் கதைகளில் பெண்ணியம் பெரும்பங்கு வகிக்க காரணமானவர்கள்.

மணிவாசக மெய்யப்பன்

எனக்கு அச்சுரதம் கொடுத்தவர், மணிவாசகர் நூலகத்தின்