பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இவரைப்போல் எழுதுகிறார் என்று மேல்நாட்டு எழுத்தாளரோடு ஒப்பிடலாம். ஆனால் சு. சமுத்திரத்தை அப்படி ஒப்பிட முடியாது. காரணம் அவரது படைப்புகள் அத்தனையும் “ஒரிஜினல்.”

அகிலன் அவர்கள் சுட்டிக் காட்டியதுபோல் என் மக்களின் ஆசைகளை, நேசங்களை நிராசைகளை, ஆர்ப்பாட்டங்களை கண்டறிந்து, உள்வாங்கி அவற்றை விஞ்ஞான ரீதியாக பார்த்து மீண்டும் அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கிறேன். இதனால்தான் மாடனிசம், போஸ்ட் மாடனிசம், மேஜிக்கல் ரியலிசம் போன்ற இலக்கிய வாதைகள் இல்லாமல் என்னால் சுய தன்மையுடன் நிற்க முடிகிறது. என் இலக்கியத்தை அகராதி வைத்து எவரும் படிக்க வேண்டியதில்லை. என் மொழி மக்கள் மொழி. என் எழுத்தில் பெருமைகள் இருந்தால் அவை மக்களுக்கும், சிறுமைகள் இருந்தால் அவை எனக்கும் சேர வேண்டியவை. என் எழுத்து ஏழ்மையின் வெற்றியாகாமல், ஏழைகளின் வெற்றியாக வேண்டுமென்பதே என் நோக்கம்.

தமிழில் முதன் முதலாக அய்.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்ற தோழர் பாலகிருஷ்ணன், தமிழக அரசின் மூத்த அதிகாரி பூர்ணலிங்கம் ஆகியோர் என்னை ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்து நல்ல தமிழில் எழுத வற்புறுத்துகிறவர்கள்.

இதேபோல் இலங்கை எழுத்தாளர் செ. யோகநாதன், பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோரிடம் நான் மேற்கொள்ளும் விவாதங்கள் என் எழுத்துப் பணியை செம்மைப்படுத்தும். திறனாய்வாளர் எம்.எஸ். ராமசாமி, டாக்டர் ரபீர்சிங், டாக்டர் இராமகுருநாதன், டாக்டர் பழ. முத்துவீரப்பன், பேராசிரியர்கள் டாக்டர் நளினிதேவி, தியாகமணி போன்றோர் என் படைப்புக்களை நாடறியச் செய்தார்கள்.

பெரியவர் ஆர்.என்.கே. சொன்னதுபோல் இந்த நூல் இளம் படைப்பாளிகளுக்கு ஒரு துண்டுகோலாக இருந்தால் மகிழ்ச்சி அடைவேன். இதைப் படிக்கும் தோழர்கள் இந்த நூல்பற்றி முடியுமானால் ஒரு வரி எழுதிப் போடலாம்.

தோழமைமிக்க,
சு. சமுத்திரம்