பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

சு. சமுத்திரம் ☐

சேரிப் பால்

நான் பிறந்தபோது என் அன்னை எனக்குப் பால் கொடுக்க முடியாத நிலை. மார்பில் கட்டியோ புண்ணோ இருந்ததாகக் கேள்வி. அப்போது தாய்ப் பால் இல்லையென்றால் குழந்தை தேறாது என்ற அதாவது புட்டிப்பால் யுகம் தோன்றாத காலம் - என்னை எப்படியும் காப்பாற்றி என் அம்மாவிடம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்த அரிசன மக்கள் (என் அம்மா வயதுடைய தாய்மார்கள்) எனக்கு மாறி மாறி பால் கொடுத்தார்கள். எனக்கு இன்னும் கூட அப்படி ஒரு தாயிடம் பால் குடித்தது நினைவில் இருக்கிறது. அதோடு என்னை இடுப்பில் எடுத்துக் கொண்டு வயல் வரப்பிற்கு செல்லும் என் அன்னை சேரித் தாய்மார்களுடன் தான் படும் துயரங்களைத் தெரிவித்ததும், அந்த தாய்மார்கள் என் தாய்க்கு அவ்வப்போது ஆறுதல் சொன்னதும் எனக்கு இன்னும் மனதில் பசுமையாக உள்ளன. ஊரில் வழக்குப் பேசும் பெரிய மனிதர்கள் எப்படி ஆளுக்குத் தக்கபடி நீதி வழங்கினார்கள் என்பதையும் காதாரக் கேட்டு, கண்ணாரக் கண்டேன்.

ஊராட்சி ஒன்றியங்கள் துவக்கப்பட்ட நேரம். பெருந்தலைவர் காமராஜரின் அரும்பெரும் பணியால் பல்வேறு கல்விக்கூடங்கள் திறக்கப்பட அரிசன இளைஞர்கள் தத்தம் உரிமைகளை சேரி மக்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனது சொந்தக் கிராமமான திப்பணம்பட்டிக்கு அருகே பாவூர் சத்திரத்தில் இருந்த உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது