பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எனது கதைகளின் கதைகள்

35

சமயத்தில் ஒரு பஞ்சாயத்து யூனியனில் யாரோ ஒரு அலுவலர், கலெக்டரிடம் கோழி வறுவலையும் அதன் இதர வகையறாக்களையும் கொடுத்திருக்கிறார். உடனே கலெக்டர். “இவ்வளவு பணம் ஏன் செலவழித்தாய்” என்று கேட்ட போது, அந்த ஆசாமி “அவ்வளவும் ஒரு ரூபாய்” என்றிருக்கிறார். கலெக்டர் ஜ.ஏ.எஸ். ஆச்சே. விடுவாரா? அப்படியானால். கோழி விலை ஒரு ரூபாய்க்கும் குறைவாக இருக்கலாம் என்று அனுமானித்து, முப்பது ரூபாயை அந்த ஆசாமியின் கையில் திணித்து தினமும் ஒரு ரூபாய்க்கு, ஒரு கோழி வாங்கி தனது வீட்டுக்கு அனுப்பும்படி கேட்டிருக்கிறார். நடந்ததோ, நடக்கவில்லையோ, நடந்ததாக கூறப்பட்ட செய்தி. இதை வைத்து, “கலெக்டர் வருகிறார்” என்ற தலைப்பில் குமுதத்தில் ஒரு சிறுகதை எழுதினேன். சொந்தப் பெயரில் எழுத அச்சப்பட்டு (ஏனென்றால் நானும் அரசு ஊழியனாச்சே!) கடல்மணி என்ற பெயரில் எழுதினேன். அப்போது சேலத்தில் கலெக்டர்கள் மகாநாடு நடைபெற்ற நேரம். அந்த மகாநாட்டில் பல தாசில்தார்கள், முப்பது குமுதங்களை வாங்கி, கலெக்டர்கள் கண்ணில் படும்படியாக போட்டதாக அப்போது டெபுடி கலெக்டராக இருந்த எனது நண்பர் தெரிவித்தார்.

குமுதத்தில் வெளியான எனது முதல் கதை இது. இதில் ஒரு ரூபாய் ஒரு கோழி என்று சொல்லி அசட்டுத்தனமாக மாட்டிக்கொண்ட கிளார்க்கிற்கு பண்டாரம் என்று பெயர் வைத்தேன். இந்த பண்டாரம் பிறகு பல சிறுகதைகளில் வந்தான். அவனும் அசட்டுத் தனத்திலிருந்து படிப்படியாக முன்னேறி பலரை ஆட்டி வைக்கும் சக்தியைப் பெற்றான். நான் அலுவலகங்