பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

39

மறக்கத் தொடங்கி விட்டேன். நான் சென்னையில் பட்ட சிரமங்களும், வளத்தம்மா, மகள்கள் விஷயத்தில் மேற்கொண்ட திருமண முடிவுகளும், (அப்போது நான் பிறக்கக் கூட இல்லை) எனக்கு வளத்தம்மா மீது ஒருவித விருப்பமின்மையை ஏற்படுத்தின. மூத்த மகளை முதல் மனைவியைத் தள்ளி வைத்த அண்ணன் மகனுக்கு கொடுத்தது (அதாவது என் பெரியம்மாவை) எனக்கு ஏனோ ஒரு வித இடைவெளியை அவளிடமிருந்து ஏற்படுத்தியது. விடுமுறையில் ஊருக்குப் போகும்போதெல்லாம், வளத்தம்மாவுடன் பழைய பாசத்துடன் பேசியதில்லை. வளத்தம்மாவிற்கும், மகன் வழிபேரன்கள் - பேத்திகளும் நிறைய பேர் தோன்றிவிட்டதால், என்மீது பழைய பிடிப்பு இல்லை. ஆனாலும் வளத்தம்மாவிற்கு அவ்வப்போது பணம் அனுப்பிக் கொண்டிருந்தேன். அவளுக்கு 90 வயது வந்து விட்டது. குடும்பத்தில் ஒவ்வொருவராக இறந்தார்கள். வீட்டில் பெரியவர்கள் சாகவில்லை என்றால், சின்னவர்கள் சாவார்கள் என்ற மூடத்தனத்தை எனது உறவினர்கள் சொல்லும்போது, நானும் தலையாட்டி ரசிப்பேன். திடீரென்று ஒருநாள் வளத்தம்மா இறந்து போனாதாக தந்தி வந்தது. அலறி அடித்து ஊருக்கு சென்றேன். அப்போது தான் வளத்தம்மா, என்னை வளர்த்த விதம், அம்மா இல்லாத குறையை நீக்கியது, ஆசையோடு ஊட்டியது, அடுக்கடுக்கான அறிவுரைகளைச் சொன்னது - எனக்கு நினைவிற்கு வந்தது. சின்னப்பிள்ளை போல கேவிக்கேவி அழுதேன். இன்னும் கூட சில சமயம் அழுகிறேன். இந்தப் பின்னணியில் ‘வளத்தம்மா’ என்ற கதையை ‘தாயில்’ எழுதினேன். இதில் என்னையும் தாக்கிக் கொண்டேன்.