பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

41

கொடைக்கு, அவர் வரும் போதெல்லாம் போலீஸ் பாராவோடு வருவார். ஒரு தடவை, அந்தக் குடும்பத்தில், பங்காளிகளுக்குள்ளேயே சண்டை ஏற்பட்டது. இந்த சப் இன்ஸ்பெக்டர், எந்த பங்காளிகள் அவரது பதவியை பெருமையடித்துப் பேசினார்களோ, அவர்களையே உள்ளே தள்ளிவிட்டதாக பேச்சு அடிபட்டது. இதை வைத்து, ‘எந்நன்றி கொன்றார்க்கும்’ என்ற ஒரு சிறுகதையை ‘விகடனி'ல் எழுதினேன். இந்தக்கதை வெளியான பிறகு, அவரது மனைவி தகராறு வரும் போதெல்லாம் “உங்க புத்திக்குத்தான்-சமுத்திரம் இப்படி எழுதியிருக்கிறான்” என்று சொன்னதாகக் கேள்வி. இவ்வளவுக்கும் தூரத்து உறவினரான அவரை, நான் நேருக்கு நேர் பார்த்ததில்லை. பிறகு அவர் எஸ்பியாக பணியாற்றி, பணியிலேயே உயிர்நீத்தார். அவர்மீது, எனக்கு பிற்காலத்தில் ஒரு பாசம் ஏற்பட்டது. அவரும் என்னைப் பார்க்கத் துடித்ததாக அறிந்தேன். பார்க்கலாம் என்றிருந்த காலக் கட்டத்தில், அவர் பறந்து விட்டார். இப்போதும் திருச்செந்தூர் வட்டத்தில், அவருக்கு ஏகப்பட்ட நல்லபெயர். ஒரு குடும்பத்தில் முதன்முதலாகப் படித்து, காவல் துறைக்கு நேர்மையான ஒருவன் சென்றாலும் அவனைச் சொந்தக்காரர்கள் விட மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். இந்த பிற்கால ஞானோதயத்தின் அடிப்படையில், ‘நெருப்புத் தடயங்கள்’ என்ற எனது நாவலில் சொந்தக்காரர்களால் சுரண்டப்படும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக அவரைச் சித்தரித்தேன்.

ஒரு சந்தேகத்தின் நன்மை

எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில், ஒரு இளம்