பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

45

திருந்தன; நான் அங்கே இங்கே நகரும்போதெல்லாம் அவள் கண்கள் நகர்ந்தன. அம்மாவிற்கு காலராவாம். அருகே உள்ள தென்காசிக்குப் பேயிருந்தால், ஒரு வேளை பிழைத்திருக்கலாம். அறியாமையும், மூட நம்பிக்கையும், அதற்கு மூலமான ஏழ்மையும், அம்மாவை மறுநாள் இறக்கச் செய்துவிட்டன. என்னைப் பாராமுகமாக இருந்த உறவினர்கள் அனைவரும், அன்று ஒருநாள் என் மீது அன்பு பொழிந்தார்கள். எனக்குகூட, அம்மா நான்கு நாள் இப்படி படுத்துக்கிடந்தால், நிலா வெளிச்சத்தில் தடையின்றி விளையாடலாமே என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டது இப்போதும் நினைவிற்கு வருகிறது. மறுநாள், வெள்ளிக்கிழமை, எனது தாயார் என்மீது கண்களை நிலை நாட்டியபடியே இறந்து விட்டாள். இந்தப் பின்னணியில், நான் நாற்பத்தைந்து வயது வந்தபிறகு, “பால் கணக்கு” என்ற சிறுகதை எழுதினேன். இது ‘தாயி’ல் பிரசுரமாயிற்று. ஒரு ஏழைத்தாய் புற்றுநோயால் உயிருக்குப் போராடுகிறார். ஏழைபாளைகள் அவள் அவதிப்படாமல் இறந்தால் தேவலை என்று நினைக்கும்போதோ, அவளுக்கு இறப்பு வரவில்லை. இறுதியில் ஒருவர் அவளின் ஆறு வயது மகனைக் கூப்பிட்டு, காதுக்குள் கிசுகிசுக்கிறார். உடனே அந்தச் சிறுவன் அம்மாவின் அருகே சென்று “நீ சந்தோஷமா போம்மா. நான் ஆடு மேய்ச்சோ, மாடுமேய்ச்சோ உன் பெயர் விளங்கப் பிழைத்துக் கொள்வேன்” என்று மாறி மாறி சொல்லுகிறான். அந்தத் தாயின் உயிர் நிம்மதியாகப் பிரிகிறது. இந்தக் கதையை எழுதும்போது என்னையறியமால் அழுது விட்டேன். இது எனக்குப் பிடித்த அம்மாவைப் பற்றி எழுதிய பிடித்தமான கதை.