பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

சு. சமுத்திரம் ☐

இப்படியாக இருந்த அவள், ஒருநாள் என்னைக் கண்டபடி திட்டினாள். நான் அவளைப் பார்க்க முற்படும்போதெல்லாம், முகத்தைத் திருப்பிக்கொண்டால் கூட பரவாயில்லை. “சோம்பேறிங்க, பொறுக்கிங்க” என்று பொறுக்கி எடுத்த வார்த்தைகளால் சூடு போட்டாள். எனக்கு எதையோ இழந்ததுபோல் தோன்றியது. நான் அவளைப் பார்க்கப் பார்க்க, அவளின் திட்டுதல், வலுத்ததே தவிர குறையவில்லை. இதற்குள் கலியாணம் வேண்டாம் என்றிருந்த அவள், அப்போது வந்த ஒரு வரனுக்குச் சம்மதித்து வீட்டை விட்டுப் போய் விட்டாள். காலப்போக்கில், நானும் இதை மறந்துவிட்டேன். அல்லது அடிமனத்திற்குள் அவள் எண்ணத்தைப் போட்டுவிட்டேன். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பஸ் நிலையத்தில் ஒரு பூக்காாியைப் பார்த்தேன். அவள் மாதிரியான சாயல், வற்றிப்போன உடல், பட்டுப்போன முகம். அசல் கிழவியானது மாதிரி தோற்றம். அவள் முன்னால் போய் நின்றேன். அவள் என்னை ஏறிட்டுப் பார்த்தாள். எதுவும் பேசவில்லை. பிறகு நானே ‘நீ அவள்தானே?’ என்று கேட்டபோது, அவள் கண்ணீர் சிந்தாத குறையாகத் தலையாட்டினாள். பிறகு ‘நீ பட்டபாட்டுக்கு இப்போது இவ்வளவு நல்லா இருக்கிற; பார்க்கிறதுக்கு படா சந்தோஷமா இருக்கப்பா’ என்றாள். நன்றாக இல்லாமல் போன அந்த ஏழைப்பெண்ணுடன் சிறிது நேரம் வீட்டில் உள்ளவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டேன். பிறகு அவளிடம் “உன் மேல் உயிரையே வச்சிருந்தேன். ஆரம்பத்தில் ஆசைகாட்டி விட்டு, அப்புறமாய் ஏன் திட்டினாய்?” என்று அவளிடம் உருக்கமாக கேட்டேன். அவள் விளக்கினாள். அவளும் என்மேல்