பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அணிந்துரை


திரு. சு. சமுத்திரம் அவர்கள் தமிழகத்தில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அனைத்திந்தியப் பரிசான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர். “கலை கலைக்காகவே”, எனும் வசதிக்காரர்களின் கொள்கைக்கு நேர் எதிரான கருத்துக் கொண்டவர்.

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் குறிக்கோள் இருக்க வேண்டும்; உழைப்பின் பலனை தானும் பிறரும் இவ்வுலகில் அனுபவிக்க வேண்டும்; எதிர்கால சந்ததிக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை உயிர் மூச்சாகக் கொண்டுள்ளவர்.

திரு. சமுத்திரத்தின் கதைகளும், புதினங்களும் தாம் வாழும் தமிழ் சமுதாயத்தின் வாழ்க்கையை பிரதிபலிப்பவை; சிற்றூர்களின் பல்வேறு சாதிகளாகப் பிரிந்து வாழும் உழைக்கும் மக்களிடையே காணும் சிறந்த மானிடப் பண்புகளை சமுத்திரத்தின் படைப்புகளில் காண முடியும்.

சாதிஒழிப்பு என்ற உயர்ந்த லட்சியத்திற்கு கலப்புத்திருமணமும் ஒரு மாற்றாக ஒத்துக் கொள்கிறோம்; ஆனால் அதுவே இரு சாதிகளுக்குள் மோதலாக வெடித்து விடுகிறது; நீண்டகாலத்துக்கு நீடிக்கும் பகமையாக மாறி விடுகிறது. திரு. சமுத்திரத்தின் “ஒரு கோட்டுக்கு வெளியே” எனும் புதினத்தில் ஊரே சாதிக்கலகத்தில் எரிந்து விவசாயக் கூலியாக வாழும் ஒரு பெண்ணை சகோதரியாக வரித்துக் கொண்டு பாதுகாப்புக் கொடுக்கும் பேராண்மையை உணர முடிகிறது.