பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

51

உயிரை வைத்திருந்தாளாம். ஒருநாள் பாழாய்ப்போகிற ஒரு கல்லூரித் தோழனைக் கூட்டி வந்தேனாம். அவனிடம் இவளைக் காட்டி ஏதோ சொன்னேனாம். உடனே அவன் அவள் அங்கங்களை பச்சையாக வர்ணித்தானாம். நான் தட்டிக் கேட்கவில்லையாம். “இவனோட என்ன பேச்சு?” என்ற முடிவுக்கு வந்து விட்டாளாம். எனக்கே ஞாபகமில்லை, அப்படி அவன் பேசியபோது, ஒருவேளை நான் அவள் மயக்கத்தில் இருந்திருப்பேன். அவளிடம் ரகசியம் பேசுவதுபோல் கேட்டேன். “இப்பவாவது, சொல். அப்போ நீ என்னை காதலிச்சாயா?” என்றேன். உடனே அவள், லேசாகச் சிரித்தபடியே, “நல்லாக் கேட்டே ஒரு கேள்வி” என்று இருபதாண்டுகளுக்கு முன்பு அடிக்கடி சொன்ன வார்த்தைகளை அப்போதும் சொன்னாள். அவள் அழகிழந்து, வயதிழந்து, வாலிபமிழந்து, இருந்த அந்த நிலையிலும், என்னைப் பார்த்து, சிரித்தது, என்னைப் புல்லரிக்க வைத்தது. ஏதோ ஒரு பெரிய சாதனை நடந்து விட்டது போல, நடத்திவிட்டது போல, நான் நினைத்தேன். இதற்குப்பிறகு அவளை நான் பார்க்கவேயில்லை. இருபதாண்டுகளுக்கு முன்பு பார்த்த அவளை அந்த அழகுக்கோலத்தில் மிதந்த அவளை இப்போதைய அலங்கோலத்தில் பார்க்க ஏனோ மனம் இடம் கொடுக்கவில்லை. இந்தக் கட்டுரை எழுதும் இந்தச் சமயத்தில் ஒரு வாரத்திற்குள் அவளைப் போய்ப் பார்க்க வேண்டும் என்பதுபோல் தோன்றுகிறது. இந்தப் பின்னணியில் “நல்லாக் கேட்டே ஒரு கேள்வி” என்று ஒரு சிறுகதை எழுதினேன். ஆரம்பக் காலத்தில் என் மனதில் ராணியாக இருந்த அவளை, ராணி பத்திரிகை வெளிப்படுத்தியது.