பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிராம வாழ்க்கை மிகவும் சிக்கலானது; மனிதனின் சிறப்பை மதிக்காத சாதிக் கொடுமைகள், ஊர்க்கூட்டம் என்பது போலி ஜனநாயகம்; நாட்டாண்மைக் காரரின் குடும்ப மேலாதிக்கமே சில இடங்களில் நீடிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலும், பழைய பத்தாம்பசலி ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியவில்லை என்ற பிற்போக்காளர்களின் ஆதங்கமும் சு. சமுத்திரத்தின் படைப்புகளில் படம் பிடித்துக் காட்டப்படுகின்றன.

இன்றைய அரசியல், நிர்வாகச் சீர்குலைவு, நல்வாழ்வுத் திட்டங்களின் சலுகைகள் மக்களைச் சென்றடையாமல் பலபேர் கைமாறும் ஐஸ் கட்டியாக கரைந்து விடுவதை பல்வேறு கதைகளில் எழுதியிருக்கிறார்.

திரு. சு. சமுத்திரம் அவர்கள் சமூகப் பிரக்ஞையுள்ள எழுத்தாளர்; அவர் எழுதிய கதைகளுக்குக் கருவாக இருந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டு இருக்கிறார். இது புது எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறோம்.

இன்றைய தமிழ் சமூகத்தின் சீரழிந்து வரும் அரசியல், பண்பாடுகளை துணிச்சலாகச் சாடி வருகிறார்; கதை உருவகங்களில் படைத்து வருகிறார். தனது படைப்புகளில் புதிய உத்திகளைக் கையாண்டு வருகிறார். அவர் மேலும் பல புதிய படைப்புகளைத் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கி சிறப்பிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

சென்னை

4.4.1996

ஆர். நல்லகண்ணு

செயலாளர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

தமிழ் மாநிலக்குழு.