பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

77

களை நிறுத்தினேன். நிறுத்த முடியாத சமயங்களில் மேலதிகாரிகளுக்கு தெரியப் படுத்தினேன். இதனால் வெகுண்டெழுந்த இவரும், செய்தி ஆசிரியரும், அப்போதைய நிலைய இயக்குநரும் தீரமான அம்பேத்கார் வாதியுமான திரு செளடேகர் மீதும் என் மீதும் பல அவதூறுச் செய்திகளை தொலைக்காட்சியில் நான் சேர்ந்ததால் பிழைப்பற்றுப் போன நிருபர்களின் மூலம் பத்திரிகைகளில் இடம்பெறச் செய்தார்கள். மேலிடம் விசாரணை நடத்தி, நானும், செளடேகரும் குற்றமற்றவர் என்பதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி தொலைக்காட்சி நிலையத்தை வியாபாரத் தலமாக்கிவிட்டார் என்று குற்றம் சாட்டி அவரை டெல்லிக்கு மாற்றியது. லஞ்ச லாவண்யத்தை தடுத்த என்னையும் பெங்களுருக்கு மாற்றியது. அப்போது சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இரண்டு செய்தியாசிரியர் பதவிகள் இருந்தன. சமமான இந்த இரு பதவிகளில் ஒன்றை செய்தியாசிரியர் என்றும் மற்றொன்றை கூடுதல் செய்தியாசிரியர் என்றும் அழைப்பதுண்டு. டெல்லிக்கு தண்டனை மாற்றமாகச் சென்ற அந்த அதிகாரி - எந்த தொலைக்காட்சி நிலையத்தை வியாபாரத் தலமாக்கினாரோ அங்கேயே செய்தியாசிரியராக வந்தார். ஏற்கனவே அங்கு ஒரு செய்தியாசிரியர் அங்கு இருந்ததால் இவர் கூடுதல் செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டிருப்பார் என்று “மக்கள்” அனுமானித்தார்கள். இதே “மக்கள்”, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அணுகி, இந்த அடாவடி நியமனத்தை ஒரு கேள்வி கேட்கச் செய்தார்கள். இன்னாரை கூடுதல் செய்தி ஆசிரியராக நியமிக்கலாமா என்பது கேள்வி. இல்லை என்பது பதில்...