பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

89

வைக்கிறோம்’ என்று கிண்டலடித்தேன்... ‘உன் ஆளை கீழே வைத்துக் கொண்டு, என் ஆளைச் சாடுவதற்கு உனக்கு என்ன யோக்யதை இருக்கிறது’ என்று கோபமாக கேட்டுவிட்டு, அவர்கள் ஏச்சுக்கு பயந்து வெளியேறினேன். அப்போது அவர்கள், ‘பன்னி, பன்னி...’ என்றார்கள். நானும் அவர்களை ஒரு காட்டுப்பன்றி முறைப்பது போல் முறைத்தேன்... கடைசியில் விசாரித்தால், பன்னி என்ற கன்னட வார்த்தைக்கு ‘வாங்கோ... வாங்கோ...’ என்ற மரியாதையான அர்த்தமாம். அதாவது என்னை நடத்திய குற்ற உணர்வில் அவர்கள், கொடுத்த மரியாதையான வரவேற்பு. கல்கியில் இது ‘கள்ளிநியாயம்’ என்ற பெயரில் கதையானது... கன்னடத்தில் ‘ஹள்ளி’ என்றால் கிராமம்... நான் இரு பொருளில் இந்த தலைப்பை வைத்தேன்.

எக்குடி தோற்பினும்

எனது ஹாசன் பப்ளிசிட்டி ஆபீசருடன் குதிரை மூக்கு என்ற இடத்திற்குச் சென்றேன். இந்தப் பகுதியில் இரும்புத் தாது எடுக்கப்பட்டு, ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குள்ள மலைக் குதிரைமூக்கு மாதிரி இருக்கிறது என்பதால், இதற்கு குதிரை மூக்கு என்று பெயர் வைத்தார்களாம். இங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினேன். இந்தத் தொழில் திட்ட பொதுமக்கள் தொடர்பு அதிகாரி, எனக்கு மேல் அதிகாரியாக இருந்தவரின் மகன். என்னை நன்றாகவே கவனித்தார். இங்குள்ள தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள், திரையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் என்று எல்லா வசதிகளும்