பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

91

குதிரை மூக்கு திட்டப் பகுதியில் நிரந்தர தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது, நிர்வாகம், இவர்களை, அந்த இடங்களில் அமர்த்துவதற்கு முன் வந்தார்களாம். இவர்களோ மறுத்துவிட்டார்களாம். இத்தகைய, இவர்களின் வர்க்க உணர்வு, என்னை புல்லரிக்க வைத்தது. திரைப்படத்திற்குப் பிறகு, இவர்களிடம் இருந்து பிரியாவிடை பெற்றேன். இவர்கள் காட்டிய அன்பும், ஆரவாரமும் நான் கண்ட இனிமையான சுகங்களில் ஒன்று. இவர்களைப் பின்னணியாக வைத்து - இவர்கள் தங்களுக்கு வலிய வந்த நல்ல வேலையை தொழிலாளர் வர்க்கத்திற்காக, அதுவும் பாராமுகமாக இருந்த தொழிலாளர்களுக்காக விட்டுகொடுத்ததை மகோன்னதமான தியாகம் என்றே நினைக்கிறேன். இதை வைத்து “எக்குடி தோற்பினும்” என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதினேன். கதை செம்மலரில் பிரசுரமாயிற்று. பின்னர் இதே கதை தமிழகத்தின் சிறந்த சிறுகதைகள் என்ற புத்தகத்தில் இடம் பெற்றது. தாய் இதழில் ‘சிகரங்களைத் தொட்ட சிறுகதைகள்’ என்ற தலைப்பில் மீண்டும் பிரசுரமாயிற்று. இது எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பாசிரியர்களில் ஒருவரும், தலைசிறந்த சிந்தனையாளருமான திரு எஸ்.ஏ. பெருமாள் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சங்கத்தின் திருச்சி மாநில மாநாட்டில் சந்தித்தபோது இந்தக் கதை பாட்டாளி வர்க்க கலாச்சாரத்தை மிகச் சிறந்த நேயத்தோடு குறிப்பிடுகிற கதை என்று என்னிடம் தெரிவித்தார்.